தினகரன் கைது ஜெயலலிதா ஆத்மாவும், ஆவியும் பழிவாங்கி உள்ளது பொன்னையன் பேட்டி


தினகரன் கைது  ஜெயலலிதா ஆத்மாவும், ஆவியும் பழிவாங்கி உள்ளது பொன்னையன் பேட்டி
x
தினத்தந்தி 26 April 2017 6:25 AM GMT (Updated: 26 April 2017 6:24 AM GMT)

லஞ்சம் கொடுத்து இரட்டை இலை பெற்று ஓ.பி.எஸ். அணியை அழிக்க வேண்டும் என நினைத்தனர். அதை அம்மாவின் ஆத்மாவும், ஆவியும் பழிவாங்கி விட்டது என ஓபிஎஸ் அணீயைச் சேர்ந்த பொன்னையன் கூறினார்



சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-]

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுத்த கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்திய  வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இது ஒரு கிரிமினல் நட வடிக்கையாகும்.

எனவே தினகரன் கைது செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கையே. இதற்கு ஆழமான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் புலனாய்வு செய்து உண்மைகளை அதிகாரிகள் வெளிக் கொண்டு வர  வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்று சசிகலா குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கே அவர் தலை குனிவையும், மானக்கேட்டையும் ஏற்படுத்தி விட்டார்.

லஞ்சம்  கொடுத்து இரட்டை இலை  பெற்று ஓ.பி.எஸ். அணியை அழிக்க வேண்டும் என நினைத்தனர். அதை அம்மாவின் (ஜெயலலிதா) ஆத்மாவும், ஆவியும் பார்த்துக் கொண்டிருக்காமல் பழிவாங்கி விட்டது. இதனால் ஓ.பி.எஸ். அணி தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.  நேர்மையும், சத்தியமும் சட்டத்தின் நீதியும் வென்று விட்டது.ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே போயஸ் தோட்டத்தில் இருந்தும், கட்சியிலும்  தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட்டனர்.

தற்போது கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும், அம்மா இடத்தை பிடிக்க வேண்டும் என கருதி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் இரு அணிகளும், அம்மாவின் தொண்டர்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான்  ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவரின் விருப்பமாகும்.

கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தை விரட்ட வேண்டும். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அம்மாவுக்கு  (ஜெயலலிதாவுக்கு) தேவையற்ற  மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அது ‘ஸ்லோ பாய்சன்’ போன்றது.அதனால் எத்தகைய சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அது போன்று அம்மா மரணத்தில் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சந்தேகம் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

எனவே பேச்சுவார்த்தைக்கு இந்த 2 நிபந்தனைகள் மட்டுமே விதித்து இருக்கிறோம். மன்னார் குடி குடும்பத்தால் ஆட்சி பீடத்திற்கு வந்தவர்கள் தான் தினகரன் பின்னால் உள்ளனர். ஓ.பி.எஸ். அணிக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story