சசிகலா குடும்பத்தினை அகற்றிவிட்டால் நாங்கள் எல்லாம் அண்ணன் -தம்பிகள்தான்: ஓ. பன்னீர்செல்வம் அணி


சசிகலா குடும்பத்தினை அகற்றிவிட்டால் நாங்கள் எல்லாம் அண்ணன் -தம்பிகள்தான்: ஓ. பன்னீர்செல்வம் அணி
x
தினத்தந்தி 26 April 2017 7:09 AM GMT (Updated: 26 April 2017 7:08 AM GMT)

சசிகலா குடும்பத்தினை அகற்றிவிட்டால் நாங்கள் எல்லாம் அண்ணன் - தம்பிகள்தான் என ஓ. பன்னீர்செல்வம் அணி கூறிஉள்ளது.

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி, ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி அளித்தது முதல் அ.தி.மு.க. பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இப்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்டெடுப்பதற்காக அ.தி.மு.க.வை ஒன்று இணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் (அ.தி.மு.க. அம்மா), ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் (அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா) இறங்கி உள்ளனர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டது. 

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்டது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியை விட்டு விலக்கப்பட்டனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு அது நின்றுபோனது. இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் கோரிக்கை ஏற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது.
 
இதற்கிடையே இருதரப்பு இடையே நேற்று இரவு ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதிமுகவின் இரு அணிகள் இடையே இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியது.

அண்ணன் - தம்பிகள்
 
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி,  “அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று செயல்படுகிறார்கள். இணக்கமான சூழல் அமையும் போது பேச்சுவார்த்தையானது தொடங்கும். பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. கட்சியை கைப்பற்ற வேண்டும் என டிடிவி தினகரன் பெரும் தவறை செய்து உள்ளார். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எதிரணியிலும் உள்ளனர்,” என கூறிஉள்ளார்.  

Next Story