ஓபிஎஸ் அணியுடன் நாளை அல்லது நாளைமறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறும்: வைத்திலிங்கம் எம்.பி


ஓபிஎஸ் அணியுடன் நாளை அல்லது நாளைமறுநாள் பேச்சுவார்த்தை  நடைபெறும்: வைத்திலிங்கம் எம்.பி
x
தினத்தந்தி 26 April 2017 2:14 PM GMT (Updated: 26 April 2017 2:13 PM GMT)

ஓபிஎஸ் அணியுடன் நாளை அல்லது நாளைமறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா), அ.தி.மு.க. (அம்மா) என கட்சி 2 அணிகளாக பிரிந்தன. இரு அணிகளையும் இணைக்க முயற்சி நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் இணைவதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அதாவது, அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரதான நிபந்தனைகளை அவர்கள் விடுத்தனர். இதற்கிடைய இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து 2 அணிகள் தரப்பிலும் இருந்து குழுக்கள் அமைக்கப்பட்டன.

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் கூறிய 2 பிரதான நிபந்தனைகளை நிறைவேற்றி பிறகே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.


நேற்று முன்தினம் இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வருவதாக இரு அணிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்  சசிகலா புகைப்படத்துடன் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டு ஜெயலலிதா புகைப்படம் மட்டும் இருக்கும் பேனர் வைக்கப்பட்டது. 

இத்தகைய பரபரப்பான அரசியல் நகர்வுகளில் அடுத்த கட்ட முன்னேற்றமாக அனைத்தும் நல்லவிதமாக நடந்து வருகிறது என்று எம்.பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம் எம்.பி கூறியதாவது:- பேச்சுவார்த்தைக்கு வர பன்னீர்செல்வம் அணியினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணியுடன் நாளை அல்லது நாளைமறுநாள் பேச்சுவார்த்தை  நடைபெறும். அனைத்தும் நல்லவிதமாக நடந்து வருகிறது” என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது டிடிவி தினகரன் பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமலேயே வைத்திலிங்கம் அங்கிருந்து சென்றுவிட்டார்.

Next Story