வெளிப்படையாகத்தான் பேச்சுவார்த்தை நடக்கும்: அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணையும் காலம் கனிந்து விட்டது


வெளிப்படையாகத்தான் பேச்சுவார்த்தை நடக்கும்:  அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணையும் காலம் கனிந்து விட்டது
x
தினத்தந்தி 26 April 2017 10:45 PM GMT (Updated: 26 April 2017 8:23 PM GMT)

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணையும் காலம் கனிந்துவிட்டது, பேச்சுவார்த்தை வெளிப்படையாகத்தான் நடக்கும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

சென்னை,

இந்திய தேர்தல் கமி‌ஷனால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா ஆகிய 2 அணிகளும் இணைய முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா கட்சியில் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 25, 26, 27–ந் தேதிகளில் நடைபெறும் என்று அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் முதற்கட்டமாக 15 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது.

2–வது கட்டமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்பட 17 மாவட்ட செயலாளர்களுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்து கேட்பு

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைவதை தொண்டர்கள், பொதுமக்களிடம் வரவேற்பு எவ்வாறு உள்ளது? என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. இணையும் முடிவை வரவேற்று பேசினர். முதல்–அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கக்கூடாது என்று சில மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. அதி.மு.க. இணையும் பட்சத்தில் யாருக்கு பொதுச்செயலாளர், துணை பொது செயலாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். முக்கியமாக இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது.

3–வது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

சுமுகமாக நடைபெறும்

கூட்டம் முடிந்து வெளியே வந்த வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– 2 அணிகள் இடையே பேச்சுவார்த்தை குறித்த முடிவு எந்த நிலையில் இருக்கிறது?

பதில்:– பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும். நாளை (இன்று) அல்லது நாளை மறுநாள் (நாளை) பேச்சுவார்த்தை நடக்கும். மறைமுக பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். ஊடகங்கள் முன்னிலையில் தான் நடத்துவோம்.

திருத்தம்

கேள்வி:– பேச்சுவார்த்தை நடத்த காலதாமதம் ஏன்?

பதில்:– அந்த அணியினர் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். நாங்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். எல்லாம் நல்ல விதத்தில் போய் கொண்டு இருக்கிறது.

கேள்வி:– தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்க வேண்டிய பிரமாண பத்திரத்தில் என்ன திருத்தம் செய்து வருகிறீர்கள்?

பதில்:– எந்த திருத்தமும் இல்லை. சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர், முதல்–அமைச்சர், தலைமை நிலைய செயலாளர் என்ற வார்த்தை சேர்க்கப்படாமல் இருந்தது. அதை தான் சேர்த்தோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

காலம் கனிந்துவிட்டது

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, ‘‘2 அணிகளின் ஒற்றுமைக்கான பணிகள் நடந்து வருகிறது. அது நன்றாக நடந்துமுடிந்தால் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும். மிக விரைவில் ஒற்றுமை நடக்க காலம் கனிந்து உள்ளது’’ என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘2 அணிகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான காலம் கனிந்துவிட்டது. விரைவில் நல்லது நடக்கும். வெளிப்படையாகத்தான் பேச்சுவார்த்தை நடக்கும்’’ என்றார்.


Next Story