ஜெயலலிதாவின் பங்களாவிலேயே, துணிச்சலாக நடந்த கொலைச்சம்பவம் சட்டம்–ஒழுங்கு பராமரிக்கப்படவில்லையோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது


ஜெயலலிதாவின் பங்களாவிலேயே, துணிச்சலாக நடந்த கொலைச்சம்பவம் சட்டம்–ஒழுங்கு பராமரிக்கப்படவில்லையோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
x
தினத்தந்தி 26 April 2017 10:46 PM GMT (Updated: 26 April 2017 10:45 PM GMT)

ஜெயலலிதாவின் பங்களாவிலேயே, மிகவும் துணிச்சலாக நடைபெற்ற கொலைச்சம்பவம், தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கொலை

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. குறிப்பாக கட்சி நிர்வாகிகளிடம், விசுவாசத் தொண்டர்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. நள்ளிரவில் பல வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா என்று தெரிந்தே, அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்களைத் தடுத்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பல சூட்கேஸ்களில் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

அந்தச்செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆவணங்களை அள்ளிச்சென்றது யார்? அவர்கள் வேறு எதாவது காரணங்களுக்காக அத்துமீறி உள்ளே நுழைந்தார்களா? அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? என்று பல்வேறு சந்தேகங்களை ஊடகங்கள் எழுப்பியிருக்கின்றன. அவர்களை அனுப்பியது யார்? என்ற சந்தேகங்கள் கட்சி நிர்வாகிகள், விசுவாசத் தொண்டர்களின் மனதில் பெரும் பதற்றத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை விசாரணை என்ற பெயரில் வருகின்ற செய்திகள் எல்லாம் முன்னுக்குப்பின் முரணாகவே இருக்கிறது. இந்த முரண்பாடுகளுக்கு என்ன காரணம்?

சட்டம்–ஒழுங்கு

காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா? என்ற கேள்விகள் எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கிறது. மக்களால் இன்றும் போற்றிப் புகழப்படும் ஒரு சக்தி வாய்ந்த முதல்–அமைச்சராக விளங்கிய ஜெயலலிதாவின் பங்களாவிலேயே, மிகவும் துணிச்சலாக நடைபெற்ற இந்த கொலைச்சம்பவம், தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், இந்தக்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதில் அலட்சியமாக இருந்து விட வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதோடு, இனி எப்பொழுதும் ஜெயலலிதாவின் புகழுக்கு, சிறு குன்றுமணி அளவுகூட குறைவு ஏற்பட்டுவிடாமல் காக்கின்ற பெரும் பொறுப்பும் இந்த அரசுக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story