தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்–9 செயற்கைகோள் 5–ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது


தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்–9 செயற்கைகோள் 5–ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது
x
தினத்தந்தி 26 April 2017 10:46 PM GMT (Updated: 26 April 2017 10:45 PM GMT)

தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்–9 செயற்கைகோள் வருகிற 5–ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

சென்னை,

பிரதமர் மோடியின் உத்தரவை ஏற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள், தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட்–9 என்னும் செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.

தகவல்தொடர்பு செயற்கைகோளான இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வருகிற 5–ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஏவப்படுகிறது. அங்குள்ள 2–வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி– எப்09 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 11–வது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டில் அனுப்பப்படும் செயற்கைகோளின் பயனை தெற்காசிய மண்டலத்தில் பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து நாடுகளும் அடையும். ஏனெனில், பாகிஸ்தான் மட்டும் இந்த திட்டத்தில் சேரவில்லை.

ஜிசாட்–9 செயற்கைகோள்

ஜிசாட்–9 செயற்கைகோள் 2,230 கிலோ எடைகொண்டது. தகவல் தொடர்புக்கு உதவும் ‘12 கே.யு. பாண்ட்’ கருவிகளை சுமந்து கொண்டு இந்த ராக்கெட் செல்கிறது. இதனுடைய ஆயுள் காலம் 12 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைகோள், தகவல் தொடர்பு, தெற்காசிய நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கு முன்கூட்டியே பேரழிவு தொடர்பான தகவல்களை தெரிவிப்பது, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தகவல் திறனை அளிப்பது, மாநில நூலகங்களை ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றை கொண்டது.

தெற்காசிய நாடுகள் தங்களுடைய சொந்த பயன்பாட்டுக்காக 36 முதல் 54 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட ஒரு டிரான்ஸ்பாண்டரை இந்த செயற்கைகோள் மூலம் பயன்படுத்த முடியும். இதை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நேரம் மற்றும் இறுதிகட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.  மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Next Story