விசாரணைக்காக டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்தது டெல்லி போலீஸ்


விசாரணைக்காக டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்தது டெல்லி போலீஸ்
x
தினத்தந்தி 27 April 2017 7:42 AM GMT (Updated: 27 April 2017 7:41 AM GMT)

விசாரணைக்காக டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூன் உள்ளிட்டோரை டெல்லி போலீஸ் சென்னை அழைத்து வந்துள்ளது.

சென்னை,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 4–வது நாள் விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி.டி.வி.தினகரனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸுக்கு அனுமதி கிடைத்தது.

இந்த நிலையில்,  விசாரணைக்காக டிடிவி தினகரனை  டெல்லி போலீஸ், சென்னைக்கு அழைத்து வந்துள்ளது. கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்த டெல்லி போலீஸ்  திட்டமிட்டு உள்ளனர். ரூ.10 கோடி பணம் எங்கிருந்து, யார்–யார் கைமாறி, எந்த வழியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் விதமாக போலீசார் மேற்கண்ட இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க இருக்கிறார்கள். மேலும் சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்று உள்ளனர். இதேபோல் தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவின் வீட்டில் சோதனை போடவும் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

Next Story