நடிகை கணவர் தற்கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு மனு போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு


நடிகை கணவர் தற்கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு மனு போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 27 April 2017 8:48 PM GMT (Updated: 27 April 2017 8:47 PM GMT)

சென்னை ஐகோர்ட்டில், வளசரவாக்கத்தை சேர்ந்த சாந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என் மகன் கார்த்திகேயன், 8 மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை ஆர்.நந்தினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்னை,

திருமணம் நடந்த நாளில் இருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 2 மாதங்களுக்கு முன்பு நந்தினி தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் விவாகரத்து கேட்டு என் மகனை அவர் நிர்பந்தம் செய்தார். இந்த நிலையில், என் மகன் கடந்த 3–ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது 4 கடிதங்களை அவர் எழுதி வைத்திருந்தார். அதில், நந்தினியின் தந்தை ராஜேந்திரனின் செயல்களினால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். இதனடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், சந்தேகச்சாவு என்று விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கை விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சட்டப்படி முறையாக விசாரிக்க வில்லை. அதனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை ஜூன் 2–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story