எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி, மாணவிகளே அதிக தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி, மாணவிகளே அதிக தேர்ச்சி
x
தினத்தந்தி 19 May 2017 4:49 AM GMT (Updated: 19 May 2017 4:48 AM GMT)

10 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது. தமிழகத்தில் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

சென்னை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள் உள்பட) எழுதினார்கள். இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, மாணவர்களின் ‘ரேங்க்’ பட்டியலை வெளியிடாமல், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அவர்களுடைய மதிப்பெண்ணை செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. 

அதன் அடிப்படையில்தான், கடந்த 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதைப்போலவே இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 

தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பட்டு உள்ளது. 

94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டைவிட 0.8 சதவிதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. எப்போதும் போன்று தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முதலிடம் பிடித்து உள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.2 சதவித மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 92.5 சதவிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்ட வாரியாக விருதுநகர் மாவட்டம் 98.55 சதவித தேர்ச்சி பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டம் 98.17 சதவிதத்துடன் இரண்டாவது இடம் பிடித்து உள்ளது. ராமநாதபுரம் 98.16 சதவிதத்துடன் மூன்றாவது இடம் பிடித்து உள்ளது. 

தமிழ் மொழிப்பாடத்தில் மொத்தம் 69 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். கணிதப்பாடத்தில் 13,759 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். அறிவியல் பாடத்தில் 17,481 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 61,115 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். 1557 பள்ளிகள் 10 விழுக்காடு தேர்ச்சி பெற்று உள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் 91.59 சதவிகித தேர்ச்சி பெற்று உள்ளனர். 481 மதிப்பெண்களுக்கு மேல் 38,611 மாணவர்கள் பெற்று உள்ளனர். 

Next Story