மழைக்கு ஒதுங்கியபோது இடி-மின்னல் தாக்கியது: அரிசி ஆலை சுவர் இடிந்து விழுந்து 5 பெண்கள் சாவு


மழைக்கு ஒதுங்கியபோது இடி-மின்னல் தாக்கியது: அரிசி ஆலை சுவர் இடிந்து விழுந்து 5 பெண்கள் சாவு
x
தினத்தந்தி 26 May 2017 10:00 PM GMT (Updated: 26 May 2017 7:13 PM GMT)

செங்கம் அருகே இடி-மின்னல் தாக்கியதில் அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்து 5 பெண்கள் பலியானார்கள்.

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தளவநாயக்கன்பேட்டையில் நவ்ஷாத் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையின் கட்டிடம் புதுப்பணிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணியில் சொர்பணந்தல் கிராமத்தை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் நேற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கட்டிடத்தில் மேற்கூரை அமைப்பதற்காக இரு சுவர்களின் மீதும் இரும்பு கம்பிகளை நிலைநிறுத்தும் பணி ‘ஹைட்ராலிக்’ எந்திரம் மூலம் நடந்து கொண்டிருந்தது. மாலை 5 மணியளவில் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 7 பெண்கள் அரிசி ஆலையின் கட்டிடப்பணி நடந்த ஒரு அறையில் மழைக்காக ஒதுங்கினார்கள்.

இடி-மின்னல் தாக்கியது

தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் பெண்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அந்த அறையின் அருகே தகரத்தால் ஆன புகைக்கூண்டு இருந்தது. இரவு 7.50 மணியளவில் புகைக்கூண்டில் திடீரென இடி-மின்னல் தாக்கியது. அப்போது ஏற்பட்ட இடியோசை அந்த பகுதியையே அதிர வைத்தது.

அங்கு கட்டிடத்தை தாங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மற்றும் ஹைட்ராலிக் எந்திரத்திலும் மின்சாரம் பாய்ந்தது. கட்டிட பணி நடந்து கொண்டிருந்த அறை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்த 7 பெண்களும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி அலறினர். சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

5 பெண்கள் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சொர்பனந்தலை சேர்ந்த ஆண்டாள் (55), ஆரவள்ளி (40), குமுதா (31), செல்வி (40), ரேணு (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயமடைந்த 2 பெண்கள் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story