இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு: ரெயில் மறியலுக்கு முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 175 பேர் கைது


இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு:  ரெயில் மறியலுக்கு முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 175 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2017 7:31 PM GMT (Updated: 28 May 2017 7:31 PM GMT)

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

மாடு, எருமை, ஒட்டகம், பசுமாடுகள், கன்றுகள் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சி கோவையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.

இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், தடையை மீறி நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். போலீசார் தடுப்புகளை வைத்து அரணாக நின்றனர். மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் அந்த தடுப்புகளை தாண்டி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

175 பேர் கைது

ரெயில் நிலையம் முன்பு சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்துநிறுத்தி கைது செய்தனர். ரெயில் மறியலுக்கு முயன்றதாக 175 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டம் குறித்து அக்கட்சியின் மண்டல தலைவர் ஏ.முஸ்தபா கூறும்போது, “மத்திய அரசு, மாடுகளை விற்கவோ? இறைச்சிக்காக வெட்டவோ? தடை செய்துள்ளது. அதில் ஒட்டகத்தையும், எருதையும் சேர்த்து இருப்பதில் உள்நோக்கம் உள்ளது. ஆடு, கோழி ஆகியவற்றை அறுப்பது மிருகவதை இல்லையா? இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. கேரளா போல தமிழக அரசும் இந்த உத்தரவை ஏற்கமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்” என்றார்.

விற்பனை குறைந்தது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது. நேற்று கூடிய இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மாடுகளை பிடித்து வந்தனர். பல கிராமங்களில் இருந்து வந்த வியாபாரிகள் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்துச் சென்றனர்.

வாகனங்களில் அதிக அளவில் கால்நடைகளை ஏற்றிவந்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்று விவசாயிகள் பயந்து மாடுகளை சுமார் 25 கி.மீ. தூரம் நடந்தே அந்தியூர் சந்தைக்கு அழைத்து வந்தார்கள்.

சந்தை நிர்வாகிகள் கூறும்போது, ‘மத்திய அரசு தடை காரணமாக விவசாயிகள் அதிக மாடுகளை விற்பனைக்கு கொண்டுவரவில்லை. அதேபோல் வாங்குபவர்களும் குறைவாகவே வந்திருந்தனர். இதன்காரணமாக மாடுகள் குறைவான விலைக்கே விற்பனை ஆனது. சிலர் தங்கள் மாடுகளை திரும்ப பிடித்துச் சென்றனர்’ என்றனர்.

போச்சம்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை பெரிய சந்தையாகும். இங்கு ஆடு, மாடுகள் விற்பனையும் படுஜோராக நடைபெறுவது வழக்கம். இதனை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் விவசாயிகளும், வியாபாரிகளும் அதிகளவில் வருவார்கள்.

இந்தநிலையில் நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தை வழக்கம் போல கூடியது. ஆனால் மாடுகள் குறைந்த அளவிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இங்கு எப்போதும் 1000-க்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் மத்திய அரசின் தடை உத்தரவு எதிரொலியால் நேற்று குறைந்த அளவிலே மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிலும் கன்றுகளே அதிகளவில் கொண்டு வரப்பட்டன. ஆனால் இவற்றை வாங்குவதற்கு யாரும் இல்லாததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.


Next Story