மாமல்லபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையை சேர்ந்த ஆடிட்டர், மனைவி, மகளுடன் பலி


மாமல்லபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையை சேர்ந்த ஆடிட்டர், மனைவி, மகளுடன் பலி
x
தினத்தந்தி 28 May 2017 8:49 PM GMT (Updated: 28 May 2017 8:48 PM GMT)

மாமல்லபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி இறந்த 3 பேரும் சென்னையை சேர்ந்த ஆடிட்டர், அவரது மனைவி, மகள் என தெரியவந்தது. அவர்களது மரணத்தில் மர்மம் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமை என்ற இடத்தில் வி.எஸ்.பி. நகர் என்ற வீட்டுமனை காலி இடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஒரு கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட், சப்-இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ மளமளவென எரிந்ததால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. காரில் இருந்த 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் உடல் கருகி அடையாளம் காணமுடியாத அளவில் இருந்தனர்.

குரோம்பேட்டையை சேர்ந்தவர்கள்

கரிக்கட்டையாக கிடந்த அவர்களது உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. போலீசார் அவர்கள் யார்? எதற்காக மாமல்லபுரம் வந்தனர்? என்பது பற்றி விசாரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் சென்னை குரோம்பேட்டை, அருள்முருகன் ராமமூர்த்தி நகர், 1-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர்கள் என தெரிந்தது. அவர்கள் ஜெயதேவன் (வயது 55), அவரது மனைவி ரமாதேவி (55), அவர்களது மகள் திவ்யஸ்ரீ (26) என்பதும் தெரியவந்தது. ஜெயதேவன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.

சாவில் மர்மம்

திவ்யஸ்ரீக்கு திருமணமாகி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் கணவருடன் வசித்துவந்தார். அவரது கணவர் சரத்(35) பதன்கோட் ராணுவ மையத்தில் கேப்டனாக பணிபுரிந்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. திவ்யஸ்ரீ 4 நாட்களுக்கு முன்பு பதன்கோட்டில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.

மாமல்லபுரத்திற்கு இவர்கள் சுற்றுலா சென்றபோது கார் ஏ.சி. வெடித்து தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினர். ஆனால் மணமையில் உள்ள வீட்டுமனை பிரிவில் இவர்களது கார் நின்றதால் வீட்டு மனையை பார்க்க வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அவர்களது கார் விபத்தால் தான் தீப்பிடித்ததா? அல்லது வீட்டுமனை தொடர்பான முன்விரோதத்தில் யாராவது இவர்களை காருக்குள் அடைத்துவைத்து தீ வைத்தார்களா? என்பது மர்மமாக உள்ளது. இதனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்கள் ஒப்படைப்பு

தகவல் கிடைத்து திவ்யஸ்ரீயின் கணவர் சரத் நேற்று செங்கல்பட்டு வந்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. கண்ணீருடன் 3 பேரின் உடல்களையும் அவர் பெற்றுச்சென்ற காட்சி பார்த்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி இறந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மர்மமரணம் குறித்து மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story