சென்னை பல்லாவரத்தில் நித்யானந்தா சீடர்கள்–பொதுமக்கள் இடையே மோதல்


சென்னை பல்லாவரத்தில் நித்யானந்தா சீடர்கள்–பொதுமக்கள் இடையே மோதல்
x
தினத்தந்தி 18 Jun 2017 10:15 PM GMT (Updated: 18 Jun 2017 6:25 PM GMT)

சென்னை பல்லாவரத்தில், நித்யானந்தா சீடர்கள்–பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

சென்னை,

சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சீடர்கள் சிலர் தங்கி உள்ளனர். இங்கு ஆசிரமம் போல் வைத்து, ஏ.சி. வசதியுடன் கூடிய கன்டெய்னர்களில் பெண் சீடர்கள் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

இந்த இடம் தொடர்பாக அந்த பகுதியில் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு பொதுமக்களுக்கும், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெண்களை நித்யானந்தா சீடர்கள், தங்கள் ஆசிரமத்தில் வந்து சேரும்படி வற்புறுத்தியதாகவும், மேலும் அந்த வழியாக செல்லும் பெண்களை பார்த்து கிண்டல் செய்ததாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், ஜமீன்பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஆண்களிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கோபி நித்யானந்தா சொருபானந்தா என்பவரிடம் இது தொடர்பாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், திடீரென நித்யானந்தா சீடர்கள் தங்கி இருந்த கன்டெய்னர்களை அடித்து நொறுக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நித்யானந்தா ஆசிரமம் தரப்பில் பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

Next Story