சட்டசபையில் வெளிநடப்பு செய்தாலும் மீண்டும் திரும்பி வந்து விவாதங்களில் பங்கேற்கிறோம்


சட்டசபையில் வெளிநடப்பு செய்தாலும் மீண்டும் திரும்பி வந்து விவாதங்களில் பங்கேற்கிறோம்
x
தினத்தந்தி 22 Jun 2017 10:45 PM GMT (Updated: 22 Jun 2017 4:38 PM GMT)

சட்டசபையில் எதிர்ப்பை தெரிவிக்க வெளிநடப்பு செய்தாலும், மீண்டும் அவைக்கு திரும்பிவந்து ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சட்டசபையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சட்டசபையில் பேரவைத்தலைவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஆனால் ஆளும் அ.தி.மு.க.வை பொறுத்தவரை, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, அதன்பிறகு, முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய அனைவருமே சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்களை அனுமதித்ததே இல்லை. பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பினால், அவற்றுக்கு பொறுப்பான பதில்களை அளிப்பதில்லை என்பதை முழுநேர வழக்கமாகவே கடைபிடித்து வருகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில் தான் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சட்டப்பேரவையை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 18–ந்தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் பலகோடி ரூபாய்கள் ‘குதிரை பேரம்’ நடந்தது குறித்த ‘ஸ்டிங் ஆபரே‌ஷன்’ பேட்டிகள் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் வெளியானது.

இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சட்டசபையில் முன்வைத்த கோரிக்கையை பேரவைத்தலைவர் நிராகரித்ததுடன், ஒட்டுமொத்த தி.மு.க. உறுப்பினர்களையும் அவையைவிட்டு வெளியேற்றி உத்தரவிட்டார். கூட்டத்தொடரின் முதல்நாளே ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். ஆகவே முதல்நாள் நடைபெற்றது ‘வெளியேற்றமே’ தவிர, தி.மு.க.வின் ‘வெளிநடப்பு’ அல்ல.

அடுத்த நாள் 15–ந்தேதி, மீண்டும் இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என நேரமில்லா நேரத்தில் நான் பிரச்சினை எழுப்பியபோது, பேரவைத்தலைவர் அதற்கும் அனுமதி தரமறுத்தார். அதை கண்டிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றோம். ‘‘எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவையில் பேசக்கூடாது, என்னிடத்தில் ஆதாரத்தை கொடுத்து விட்டுத்தான் பேச வேண்டும்’’, என்று நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு பேரவைத்தலைவர் கூறியிருந்தார்.  ஆகவே, கூட்டத்தொடரின் 3–வது நாளான 16–ந்தேதி, நான் இந்த பிரச்சினையை எழுப்பி, ‘‘ஆதாரத்தைக் கையிலே வைத்திருக்கிறேன்’’ என்று கூறி, அந்த ஆதாரத்தை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன். அதையும் சபைக்குறிப்பில் இருந்து பேரவை தலைவர் நீக்கினார். இந்தப்போக்கை கண்டித்து தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவைக்கு திரும்பினோம்.

கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தொகுதி பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு தி.மு.க. எம்.எல்.ஏ.வும் தினசரி கேள்விகளை எழுப்புகிறார்கள். கூட்டத்தொடரின் முதல்நாள் தவிர, மற்ற நாட்கள் அனைத்திலும் நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் பங்கேற்று பல்வேறு விவாதங்களை நடத்தியுள்ளோம். எங்களுடைய கருத்துகளை எடுத்துவைத்துள்ளோம்.

எனவே, இனிமேலாவது தி.மு.க.வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபிறகு மீண்டும் உடனடியாக அவைக்குத் திரும்பி மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதை எல்லாம் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்திகளாக வெளியிட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தை ஆக்கபூர்வமான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு பத்திரிகை சுதந்திரம் பயன்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story