மது கொள்கையை மாற்றி அமைக்கும் நேரம் வந்துவிட்டது தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


மது கொள்கையை மாற்றி அமைக்கும் நேரம் வந்துவிட்டது தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2017 11:15 PM GMT (Updated: 23 Jun 2017 6:40 PM GMT)

மதுபான கொள்கையை மாற்றி அமைக்கும் நேரம் தமிழக அரசுக்கு வந்துவிட்டது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் கல்லூரிக்கு மிக அருகில் டாஸ்மாக் நிறுவனம் மதுபான கடையை அமைத்துள்ளது. எங்கள் கல்லூரியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு மதுபான கடை இருந்தால், மாணவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மதுபான கடை திறக்க தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுபான கடை செயல்பட தடைவிதித்து, இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், பதில் மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மதுபானம் சில்லரை விற்பனை விதிகளுக்கு உட்பட்டு, கல்லூரியின் வளாகத்தில் இருந்து, 65.02 மீட்டர் தொலைவில் தான் மதுபான கடை திறக்கப்படுகிறது. இதில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை. எனவே, மதுபான கடையை திறக்க கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது’ என்று அவர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி கே.ரவிசந்திரபாபு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு மதுபான கடையை திறப்பதற்கு முன்பு மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு மதுபான கடையை திறப்பதாக கூறினாலும், மாணவர்களின் நலன் கருதி தெரிவிக்கப்படும் எதிர்ப்பை கவனத்தில் கொண்டு, இந்த இடத்தில் மதுபான கடை திறப்பது அவசியம் தானா? என்பதை ஒரு முறைக்கு இருமுறை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். ஏன் என்றால், ஒரு அரசின் தலையாய கடமையே, மக்கள் நலனை பாதுகாப்பது தான்.

டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினந்தோறும் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே, மதுபான கொள்கையை மாற்றி அமைக்கும் நேரம் தற்போது தமிழக அரசுக்கு வந்துவிட்டது.

இந்த வழக்கில், மதுபான கடையை திறக்கக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம், டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு மட்டும் தான் மனு அனுப்பியுள்ளார். எனவே, அவர் காஞ்சீபுரம் கலெக்டரிடம் புதிதாக ஒரு புகார் மனுவை கொடுக்கவேண்டும். அந்த மனுவை 2 வாரத்துக்குள் கலெக்டர் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அதுவரை மதுபான கடையை கல்லூரி அருகே திறக்கக்கூடாது.

இவ்வாறு நீதிபதி கே.ரவிசந்திரபாபு உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story