‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்


‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்
x
தினத்தந்தி 24 Jun 2017 12:15 AM GMT (Updated: 23 Jun 2017 7:07 PM GMT)

11 லட்சம் பேர் எழுதிய மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது.

சென்னை,

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து விலக்கு கோரியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

நீட் தேர்வுக்கு 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 7-ந்தேதி நடைபெற்ற இந்த தேர்வில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் எழுதினார்கள். தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்பட்டது.

இதற்கிடையே நீட் தேர்வில் கேள்விகள் பாரபட்சமாக இருந்ததாக கூறி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

எனவே இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்துசெய்ததுடன், ஜூன் 26-ந்தேதிக்குள் நீட் தேர்வு முடிவை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலை நீட் தேர்வு முடிவு www.cbseneet.nic.in, www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டது. முடிவை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

முதல் 25 இடங்களை பிடித்தவர்களின் பெயர், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

இந்திய அளவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவ்தீப் சிங் முதலிடம் பெற்றார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 697 மதிப்பெண் பெற்றார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆர்சித் குப்தா, மணிஷ் மூல்சந்தானி ஆகியோர் தலா 695 மதிப்பெண்கள் பெற்று 2-வது, 3-வது இடங்களை பெற்றனர்.

முதல் 7 இடங்களை மாணவர்களே பெற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 16 மாணவர்களும், 9 மாணவிகளும் உள்ளனர்.

முதல் 25 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு எழுதியவர்களில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் ஆண்கள், 3 லட்சத்து 45 ஆயிரத்து 313 பேர் பெண்கள். திருநங்கைகள் 5 பேர். திருநங்கைகள் 8 பேர் தேர்வு எழுதியதில் 5 பேர் தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை ஆங்கிலத்தில் தான் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 33 பேரும், 2-வதாக இந்தியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 663 பேரும் எழுதினார்கள்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 65,170 எம்.பி.பி.எஸ்., 25,730 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதம் அகில இந்திய கவுன்சிலிங் மூலமும், மீதி 85 சதவீத இடங்கள் மாநில கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநில கவுன்சிலிங் எப்போது நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story