7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை ரத்து சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு


7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை ரத்து சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2017 10:45 PM GMT (Updated: 23 Jun 2017 7:24 PM GMT)

தி.மு.க. உறுப்பினர்கள் 7 பேர் மீதான 6 மாத நடவடிக்கையை சபாநாயகர் ப.தனபால் ரத்து செய்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அது தொடர்பான தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, தி.மு.க. வைத்த கோரிக்கையை சபாநாயகர் ப.தனபால் ஏற்காததால், சட்டசபைக்குள்ளேயே தி.மு.க. உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்று நடந்த சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் (பெரம்பூர் தொகுதி), சபாநாயகரிடம் அவை உரிமை மீறல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் மீதான உரிமைக்குழுவின் அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், துணை சபாநாயகரும், அவை உரிமைக்குழு தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் எழுந்து, “தி.மு.க. உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி தொகுதி), கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), கே.எஸ்.ரவிச்சந்திரன் (எழும்பூர்), என்.சுரேஷ்ராஜன் (நாகர்கோவில்), க.கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), பி.முருகன் (வேப்பனஹள்ளி), கு.க.செல்வம் (ஆயிரம்விளக்கு) ஆகிய 7 பேர் மீதான அவை உரிமை மீறல் தொடர்பாக, உரிமை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்கிறேன்” என்றார்.

பின்னர், அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து, “அவை உரிமைக்குழுவின் அறிக்கையை இன்றைக்கே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிக்கையை நான் முன்மொழிகிறேன்” என்று கூறினார். பின்னர் இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறியது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் பேசியதாவது:-

அவை நடவடிக்கைகளுக்கு பெரிதும் குந்தகம் விளைவித்த தி.மு.க. உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.சுரேஷ்ராஜன், க.கார்த்திகேயன், பி.முருகன், கு.க.செல்வம் ஆகியோர் 6 மாத காலத்திற்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இக்காலத்தில் இந்த உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தையும், எந்த விதமான பிற ஆதாயங்களையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெற இயலாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவை உரிமைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அந்த பரிந்துரை நிறைவேற்றப்பெற வேண்டும் என்று இங்கே பேரவையின் சார்பாக நம்முடைய பேரவை முன்னவர் தீர்மானத்தை மொழிந்துள்ளார்.

மேற்காணும் 7 தி.மு.க. உறுப்பினர்களும் கடந்த 21-6-2017 அன்று என்னை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை அளித்து, மன்னிப்பும் கோரியுள்ளதோடு வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் எனவும் உறுதிமொழி அளித்துள்ளனர்.

அவர்கள் உறுதியளித்துள்ளதை ஏற்றுக்கொண்டும், இதுமாதிரி எதிர்காலத்தில் அவர்கள் நடக்கமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்போடும், பேரவை முன்னவர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை பேரவையின் அனுமதியோடு திரும்பப்பெற்றுக்கொண்டு, அவை உரிமை மீறல் செயலைச் செய்த 7 தி.மு.க. உறுப்பினர்களை எச்சரித்து, பிரச்சினையை இத்தோடு விட்டுவிடலாம் என நான் கருதுகிறேன். இதனை பேரவை தயவுசெய்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ப.தனபால் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து, “நான் முன்மொழிந்த தீர்மானத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். ஜெயலலிதா வழியில் வந்தவர் நீங்கள் (சபாநாயகர்). உங்கள் மனிதநேயத்தையும், இரக்க குணத்தையும் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “6 மாத தண்டனை என்பதற்கு பதிலாக, தி.மு.க. உறுப்பினர்கள் 7 பேரை எச்சரிக்கை செய்து விடுவது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால் உறுப்பினர்களிடம் மீண்டும் குரல் வாக்கெடுப்பை நடத்தினார். அப்போது, “ஆம்” என்ற குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது. உடனே, தீர்மானம் நிறைவேறுவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அவர் பேசும்போது, “சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக உரிமை குழுவுக்கு சென்று, உரிமை குழு கொண்டுவந்துள்ள தண்டனையை திரும்ப பெற நீங்கள் வேண்டுகோள் வைத்து, பெருந்தன்மையோடு சுட்டிக்காட்டி, தற்போது திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இது குறித்து விவாதிக்க உரிமை கிடையாது. இந்த பிரச்சினை நடந்தபோதே, தி.மு.க. உறுப்பினர்கள் தவறு செய்திருந்தால் எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். சபாநாயகரின் அறிவிப்புக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோரும் சபாநாயகர் ப.தனபாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் பி.தங்கமணி, “இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இதில், பாதிக்கப்பட்டது நீங்கள். ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டாக இது அமைந்திருக்கிறது. அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு ஜனநாயகத்தோடு நடந்துகொள்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு” என்றார்.

Next Story