இந்தியாவில் 6 கோடியே 90 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பிரீத்தா ரெட்டி தகவல்


இந்தியாவில் 6 கோடியே 90 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பிரீத்தா ரெட்டி தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2017 10:45 PM GMT (Updated: 23 Jun 2017 7:47 PM GMT)

இந்தியாவில் 6 கோடியே 90 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்பல்லோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி கூறினார்.

சென்னை,

அப்பல்லோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகின் நீரிழிவு (சர்க்கரை) நோய் தலைநகரமாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் 6 கோடியே 90 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்காக அப்பல்லோ மருத்துவமனை குழுமம் 55 நீரிழிவு நோய் தடுப்பு மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் 6 லட்சம் பேருக்கு நீரிழிவு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 1½ லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 2½ லட்சம் பேருக்கு எங்கள் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த இருந்து வரும் உயரிய சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அப்பல்லோ மருத்துவக்குழுமத்தின் சார்பில் சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கருத்தரங்கு சென்னையில் நாளை(அதாவது இன்று) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதில், சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் நீரிழிவு நோய் தடுப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இந்த கருத்தரங்கு நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்த பெரும் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அப்பல்லோ நீரிழிவு நோய் தடுப்பு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ககன்பாலா, அப்பல்லோ மருத்துவமனை ஆலோசகர்களான டாக்டர்கள் சாந்தாராம், வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story