30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம்; சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்


30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம்; சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2017 4:44 PM GMT (Updated: 24 Jun 2017 4:43 PM GMT)

30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் சரோஜா கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நடைபெற்ற சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவன் (தூத்துக்குடி தொகுதி) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறையை ஏற்படுத்தி, தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். ஆனால், இன்று அந்த துறையின் நிலை கவலையளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 3 சக்கர சைக்கிள் இப்போது கிடைப்பதில்லை. காரணம், அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ஓராண்டாக செலவழிக்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட வேண்டிய ரூ.1 கோடி ஒதுக்கப்படவில்லை. திருநங்கைகள் வாரியம் செயல்படவில்லை. இந்த வாரியங்களின் கூட்டம் ஓராண்டாக கூட்டப்படவில்லை.  தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி திட்டத்திற்கு இப்போது ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கும் முறை உள்ளது. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஆன்–லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. அங்கன்வாடி மையங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதை உடனே நிரப்ப வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுகிறது. சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகையை பெற ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. இதற்காக, பஞ்சாயத்துகளில் டேட்டா என்டரி ஆப்பரேட்டர் நியமிக்கப்படுவார்கள்.

அங்கன்வாடி மையங்களில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. எனவே, விரைவில் 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story