அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது


அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு:  குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
x
தினத்தந்தி 24 Jun 2017 11:45 PM GMT (Updated: 24 Jun 2017 8:33 PM GMT)

குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது.

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்காக ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குற்றால சீசனுக்காக காத்து இருப்பார்கள். இந்த ஆண்டும் குற்றால சீசன் வழக்கம்போல் தொடங்கியது. சீசன் தொடங்கிய சில நாட்கள் அருவிகளில் தண்ணீர் கொட்டியது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக சீசன் கொஞ்சம் சுமாராகவே இருந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைவாகவே இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. நேற்று காலையிலும் பொதிகை மலைப்பகுதி, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து இருந்தது.

அருவிக்கரைகளில் காலை முதல் வெயிலே இல்லை. சாரல் மழை தூறியவாறு இதமான சூழல் நிலவியது. குளிர்ந்த காற்றும் வீசியது. பழைய குற்றாலத்தில் மட்டும் தண்ணீர் குறைவாக விழுந்தது. மற்ற அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுந்தது. இதனால் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டுகிறது.

சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை என்பதால் தொடர்ச்சியாக அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி நேற்று காலை முதலே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

அனைத்து அருவிகளிலும் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அனைவரும் அனைத்து அருவிகளிலும் ஆனந்த குளியல் போட்டுச் சென்றனர். நேற்று சாரல் மழையில் நனைந்தவாறு சுற்றுலா பயணிகள் குற்றால சீசனை முழுமையாக அனுபவித்தனர்.


Next Story