சட்டசபையில் மசோதா நிறைவேறியது; உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு


சட்டசபையில் மசோதா நிறைவேறியது; உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2017 9:04 PM GMT (Updated: 24 Jun 2017 9:04 PM GMT)

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தன.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011–ம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24–ந் தேதியுடன் முடிவடைந்தது.

பின்னர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். டிசம்பர் 31–ந் தேதி தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 30–6–2017 அன்று முடிவடைகிறது.  எனவே, தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க, சட்டசபையில் நேற்று சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதாக்களை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொண்டுவந்தார்.

இந்த மசோதாக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரினார்.  இந்த பிரச்சினை தொடர்பாக இரண்டு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் அவையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தற்காலிகம் தான். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டதும் இந்த மசோதாக்கள் செயலற்றதாக ஆகிவிடும். எனவே மசோதாக்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.  இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘இந்த மசோதாக்களை குரல் வாக்கெடுப்பின் மூலம் நீங்கள் நிறைவேற்ற இருக்கும் சூழ்நிலையில் அதை எதிர்த்து தி.மு.க. வெளிநடப்பு செய்கிறது’’ என்று கூறினார். அதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் ஆளும் கட்சியினரின் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக அந்த சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேறின.  இதன்காரணமாக இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.


Next Story