மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா?


மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா?
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 24 Jun 2017 9:13 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா? என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம் அளித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர்.

அந்த துறையின் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா பதிலுரை முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உபகரணங்களின் வரி 5 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

பார்வையற்றோருக்கான சில உபகரணங்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரைல் தட்டச்சுக்கு 15 சதவீதமும், சக்கர நாற்காலிக்கு 5 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய அரசிடம் முதல்–அமைச்சர் தெரிவித்து இருக்கிறாரா? இந்த வரிகளை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?  இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சரோஜா, ‘‘முதல்–அமைச்சரின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

வணிகவரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், சிலவற்றில் வரிவிலக்கு பெற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு கேட்டுக்கொண்டதை மத்திய அரசு ஏற்று 90 சதவீத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டாலும்கூட வேறு மாற்றங்களை மேற்கொள்ள அவர்களை வற்புறுத்த முடியும். மு.க.ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.


Next Story