மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு


மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 Jun 2017 12:30 AM GMT (Updated: 24 Jun 2017 9:36 PM GMT)

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் மாநில பாட திட்டத்தில் படித்த 4.2 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.  அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு, மீதம் உள்ள 85 சதவீத இடங்களுக்கு உள் ஒதுக்கீடு முறையில் மாநில கலந்தாய்வு நடைபெறும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. இதில் புதிதாக திறக்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களும் அடங்கும். இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதமான, 456 இடங்கள் ஒதுக்கப்படும்.

மீதம் உள்ள 2,594 இடங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி 85 சதவீத இடங்கள் ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.  இந்த ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,094 இடங்களும், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் 109 இடங்கள் ஆக 2,203 இடங்கள் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும். மீதம் உள்ள 15 சதவீத இடங்கள் அதாவது 391 இடங்கள் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கு ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்படும்.

சுயநிதி மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு ஒப்படைக்கப்படும் 783 இடங்களில் 85 சதவீத இடங்கள் அதாவது 664 இடங்கள் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கள் அதாவது 119 இடங்கள் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.

‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறுவது தொடர்பான விவரத்தை அறிந்துகொள்ளும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் விரைவில் தகவல் அறியும் மையம் அமைக்கப்படும்.  மற்ற மாநிலங்கள் தங்களுக்குரிய இடங்களை தக்க வைத்துக்கொள்ள திண்டாடும் நிலையில், ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான 1,000 இடங்களை அதிகரித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடர்பான தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 14-ந் தேதி வெளியிடப்படும். மருத்துவ கவுன்சிலிங் முடிந்து பின்னர், என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்தப்படும். ‘நீட்’ தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால், வகுப்பு வாரியான இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்ற விவரத்தை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அகில இந்திய அளவிலான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாநில அளவிலான கவுன்சிலிங்குக் கும் விண்ணப்பிக்கலாம். சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகமே கவுன்சிலிங் நடத்தும். இதேபோல நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் மத்திய சுகாதார பணி இயக்குனரகம் மூலம் நடத்தப்படும். ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும்.  இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.  பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.


Next Story