தொழில் அதிபர் கொலை வழக்கில் மனைவி கைது பரபரப்பு வாக்குமூலம்


தொழில் அதிபர் கொலை வழக்கில் மனைவி கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 Jun 2017 11:15 PM GMT (Updated: 28 Jun 2017 9:13 PM GMT)

சென்னை கிண்டியில் தொழில் அதிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் ஜோதிநகர் பிரதான தெருவை சேர்ந்தவர் உதயபாலன் (வயது 37). தொழில் அதிபரான இவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவரது மனைவி உதயலேகா (37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இனிதான இந்த குடும்பத்தில் கடந்த 5-ந் தேதி அன்று இடி விழுந்தது போன்று மிகப்பெரிய துயர சம்பவம் நடந்தது. உதயலேகா 3 பெண் குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த உதயபாலன் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.

படுக்கையில் தலையில் பலத்த வெட்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் படுக்கை அறையில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள்.

கால் டாக்சி டிரைவர் பிரபாகரன் (35) என்பவர் கைது செய்யப்பட்டார். பணத்துக்கும், நகைக்கும் ஆசைப்பட்டு உதயபாலனை கொலை செய்ததாக பிரபாகரன் முதலில் வாக்குமூலம் கொடுத்ததாக கிண்டி போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கில் சரிவர விசாரணை நடக்கவில்லை என்று புகார் எழுந்தது.

இதனால் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேச மூர்த்தி, துணை கமிஷனர் லலிதா லட்சுமி, கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் விசாரணை நடந்தது.

விசாரணையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.

கொலை செய்யப்பட்ட தொழில் அதிபர் உதயபாலனின் மனைவி உதயலேகா நேற்று இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கைதான பிரபாகரனும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்.

உதயலேகாவிடமும், பிரபாகரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தொழில் அதிபர் உதயபாலன் கொலை செய்யப்பட்டது பற்றி இருவரும் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தனர்.

மனைவி உதயலேகா கொடுத்த வாக்குமூலம் பற்றி போலீசார் தரப்பில் கூறியதாவது:-

நான் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனது கணவரின் தந்தையும், எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். எங்களின் இருவரின் குடும்பத்தினரும் காரைக்காலில் வசித்தனர்.

எனது தந்தையும், கணவரின் தந்தையும் பேசி எங்களது திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தேன். இனிதாக நடந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் கால் டாக்சி டிரைவர் பிரபாகரன் ரூபத்தில் புயல் வீசியது. பிரபாகரனும் காரைக்காலை சேர்ந்தவர்.

எனது கணவர் ஜாக்குவார் கார் வைத்திருந்தார். எனது கணவர் காரில் வெளியே போகும் சமயத்தில் பிரபாகரனின் கால் டாக்சியில் நான் வெளியில் தனியாக செல்வேன். எங்கள் ஊரை சேர்ந்தவர் என்பதால் பிரபாகரன் என்னோடு அன்பாக பழகினார். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார்.

அவர் தனது குடும்பத்தோடு வறுமையில் வாடுவதாக வருத்தப்படுவார். நான் அவருக்கு பண உதவி செய்துள்ளேன். அவர் என் மீது ஆசைப்பட்டார். என்னை வைத்து அவர் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.

பிரபாகரன் வீட்டுக்கு வந்து செல்வது எனது கணவர் உதயபாலனுக்கு பிடிக்கவில்லை. என் மீது சந்தேகப்பட்டார். என்னை அடிக்கடி திட்டினார். என்னை விவாகரத்து செய்யப் போவதாக மிரட்டினார்.

இதனால் எங்கள் வீட்டில் சந்தோஷம் தொலைந்து போனது. தினமும் மனக்கஷ்டத்தால் அவதிப்பட்டேன். பிரபாகரனை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர் வீட்டுக்கு தொடர்ந்து வந்தார். எனது கணவர் திட்டியதால் புண்பட்ட எனது மனதுக்கு ஆறுதலாக பேசுவார்.

எனது கணவரை கொலை செய்துவிடலாம் என்று பிரபாகரன் கூறினார். ஆனால் அவரது கொலை திட்டத்தை நான் ஏற்கவில்லை.

எனது மனக்கஷ்டத்தை பிரபாகரன் அவருக்கு சாதகமாக பயன்படுத்தினார். எனது கணவரை கொலை செய்யப்போவதாக மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். நான் எனது குழந்தைகளோடு காரைக்காலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டேன்.

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது கணவர் தனியாக இருந்ததை பயன்படுத்தி அவரை பிரபாகரன் தீர்த்துக்கட்டி விட்டார். அவரை கொலை செய்துவிட்டதாக எனக்கு செல்போனிலும் பேசி தகவல் கொடுத்தார்.

ஒரு பக்கம் வெறுப்பு இருந்தாலும், எனது கணவர் கொலை செய்யப்பட்டதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனக்கும் தெரிந்து தான் கொலை நடந்தது என்ற உண்மையை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.

இவ்வாறு உதயலேகா வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

தொழில் அதிபர் உதயபாலனை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து பிரபாகரனும் போலீசாரிடம் தனியாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

தொழில் அதிபர் உதயபாலன் பெரும் பணக்காரர். அவரது மனைவியை கைக்குள் போட்டுக்கொண்டு அவரது செல்வத்தை அபகரித்து என்னை வளப்படுத்தி கொள்ள முடிவு செய்தேன்.

என்னிடம் அன்பாக பழகிய உதயலேகா எனது ஆசைக்கு இணங்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் எனது விருப்பத்தை நிறைவேற்ற மறுத்து வந்தார். இதனால் உதயபாலனை கொலை செய்துவிட்டு உதயலேகாவை அடைவதோடு, அவர் மூலம் உதயபாலனின் செல்வத்தை அபகரித்து பணக்காரர் ஆக முடிவு செய்தேன்.

சம்பவத்தன்று படுக்கை அறையில் உதயபாலன் தூங்கி கொண்டிருந்தார். அவரது தலையில் அரிவாளால் வெட்டினேன். ஒரே வெட்டில் மூளை சிதறி உதயபாலன் பிணம் ஆனார்.

இவ்வாறு பிரபாகரன் வாக்குமூலம் கொடுத்தார்.

பிரபாகரனும், உதயலேகாவும் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

Next Story