சென்னையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிருஷ்ணா நதி நீரை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்


சென்னையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிருஷ்ணா நதி நீரை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 July 2017 10:15 PM GMT (Updated: 23 July 2017 1:46 PM GMT)

சென்னையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிருஷ்ணா நதிநீரை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாநகரம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், கல்குவாரிகளை தேடி அலையும் அவல நிலையை இந்த அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தி விட்டது.

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வடசென்னை பகுதியிலும், நெம்மேலியில் தொடங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தென்சென்னை பகுதியிலும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஓரளவு கை கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த 6 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

இனியும் காலம் தாழ்த்தி கொண்டிருக்காமல், உடனடியாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண, லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு லாரிகளில் வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story