‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க 6 அமைச்சர்கள் டெல்லி பயணம்


‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க 6 அமைச்சர்கள் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 23 July 2017 10:15 PM GMT (Updated: 23 July 2017 6:38 PM GMT)

‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்திப்பதற்காக தமிழக அமைச்சர்கள் 6 பேர் டெல்லி விரைந்துள்ளனர்.

சென்னை,

அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கு இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘நீட்’ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், இன்னும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படாமல் உள்ளது. ஏற்கனவே, ‘நீட்’ தேர்வு தொடர்பாக தமிழக அமைச்சர்கள் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் வலியுறுத்துவதற்காக இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று இரவு 10.15 மணிக்கு இண்டிகோ விமானத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சர் டி.ஜெயக்குமார் டெல்லி செல்ல இருக்கிறார்.

டெல்லி செல்லும் தமிழக அமைச்சர்கள் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டே விலக்கு அளிக்கக்கோரி வலியுறுத்த இருக்கின்றனர். மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய மந்திரிகளை சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை), நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதால், அந்த விழாவிலும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால், இன்று அவர்கள் டெல்லியிலேயே தங்கியிருப்பார்கள் என தெரிகிறது.

மேலும், ஜனாதிபதி பதவியேற்பு விழாவில், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்ள இருக்கிறார். ஆனால், சேலத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க அவர் சென்றதால், இன்று காலை 11 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார். இன்று மாலை 5 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வார் என தெரிகிறது.

இதேபோல், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை நிர்வகிக்கும் முன்னால் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று இரவு 10.50 மணி இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்றுள்ளார். ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அவர் டெல்லி செல்வதாக கூறப்பட்டாலும், இன்று அவர் முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் என தெரிகிறது. ஒரே நேரத்தில், அ.தி.மு.க. இரண்டு அணியினரும் டெல்லியில் இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story