விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை பிரதமர் சந்திக்கிறார்


விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை பிரதமர் சந்திக்கிறார்
x
தினத்தந்தி 23 July 2017 11:45 PM GMT (Updated: 23 July 2017 7:37 PM GMT)

விவசாயிகளை சந்திக்க மறுக்கும் பிரதமர், குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை சந்திப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் உள்ள செவிலிமேடு குளம், உத்திரமேரூர் தொகுதியில் உள்ள உத்திரமேரூர் குளம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட விளாகம் குளம் ஆகிய குளங்கள், தி.மு.க. சார்பில் முழுமையாக தூர்வாரி, சீரமைக்கப்பட்டு இருப்பதை நேற்று நேரில் பார்வையிட்டு, அக்குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயிகளும் பல துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டு பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தி.மு.க. சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏரிகள், குளங்களை எல்லாம் தூர் எடுக்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் எடுத்து வைத்திருந்தேன். காரணம், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு இருக்கின்றன.

தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் இந்த பணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, பாராட்டும் வகையில் நடைபெறுவது, உள்ளபடியே தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க.வுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்தாவது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, நீர்நிலைகளில் தூர் எடுக்கின்ற பணிகளை உடனடியாக துரிதப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை சந்திக்க மறுக்கும் பிரதமர், தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய, வருமான வரித்துறையால் குற்றம்சாட்டப்பட்டு இருக்கக்கூடிய அமைச்சர்களை சந்திக்கிறாரே?

பதில்:– நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாய பெருங்குடி மக்களுடைய குறைகளை, அவர்களுடைய பிரச்சினைகளை பற்றி எல்லாம் பாரத பிரதமராக இருக்கும் மோடி கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

ஆனால், தமிழகத்தில் முதல்–அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது வருமான வரித்துறையே புகார் தந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 89 கோடி ரூபாய் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பியிருக்கிறது. அதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா சம்பந்தமாக லஞ்சம் வாங்கியிருக்கிறார், எனவே அவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என வருமான வரித்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது.

ஆனால், குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை எல்லாம் இன்றைக்கு பிரதமர் சந்திக்கிறார். மக்களுடைய பிரச்சினைகள், விவசாயிகளுடைய பிரச்சினைகள் பற்றி எல்லாம் பிரதமர் கவலைப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.


Next Story