ஆறுக்குட்டி அவருடைய தேவைக்காக சென்றிருக்கிறார்


ஆறுக்குட்டி அவருடைய தேவைக்காக சென்றிருக்கிறார்
x
தினத்தந்தி 23 July 2017 10:15 PM GMT (Updated: 23 July 2017 9:18 PM GMT)

தனது சொந்த தேவைகளுக்காகவே ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., அணி மாறி உள்ளார்.

சென்னை,

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., அணி மாறியதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மாபா பாண்டியராஜன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி. பிரபாகர் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சமீபத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய முன்னாள் எம்.பி. கே.பி.பழனிசாமியும் கூட்டத்தில் பங்கேற்றார்.

அ.தி.மு.க. அம்மா அணியினர், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் நிலவும் கருத்துகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டத்தின் முடிவில் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– அணி விலகல் குறித்து தொகுதி மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுத்ததாக ஆறுக்குட்டி கூறியிருக்கிறாரே?

பதில்:– ஏற்கனவே அவர் வரும்போது, தொகுதிக்கு சென்றபோது, நீங்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இன்னுமா செல்லவில்லை? ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்றுவிட்டுத்தான் எங்களிடம் வரவேண்டும் என்று மக்கள் சொன்னதாக, அவரே சொன்னார். எனவே ஆறுக்குட்டி அவருடைய தேவைக்காக சென்றிருக்கிறார். சொந்த விருப்பு, வெறுப்புக்காக சென்றிருக்கிறார். அதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவேண்டியது இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் மைத்ரேயன் எம்.பி. கூறியதாவது:–

எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என்று, அவருக்கு எதிராக வாக்களித்தவர் ஆறுக்குட்டி. இப்போது, அவர் திடீரென்று எடப்பாடி பழனிசாமி அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறார் என்றால், இந்த இடைப்பட்ட காலங்களிலே நடைபெற்றது என்ன? என்பதை ஆறுக்குட்டி விளக்கவேண்டும். தொகுதி மக்களிடம் கருத்து கேட்டு, அடுத்தகட்ட முடிவினை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

அந்த கருத்துகள் கேட்பது ஒரே நாளில் முடிந்துவிட்டதா? எத்தனை மக்களிடம் அவர் கேள்விகள் கேட்டார்? எத்தனை மக்களின் கருத்துகளை அவர் தெரிந்துகொண்டார்? என்பதை ஆறுக்குட்டி தமிழக மக்களுக்கு விளக்கவேண்டும். ஆறுக்குட்டி எடுத்திருக்கும் முடிவில், அவருக்கு உறுதியும், நம்பிக்கையும் இருந்தால் அவருடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கவுண்டம்பாளையம் மக்களிடம் நேரடியாக சென்று மீண்டும் வாக்கு கேட்கவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். கடும் அதிருப்தியில் அவர் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவே ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றதாக அவருடைய அணியினர் விளக்கம் அளித்தனர்.


Next Story