நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு தடை நீக்கம்


நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு தடை நீக்கம்
x
தினத்தந்தி 25 July 2017 10:15 PM GMT (Updated: 25 July 2017 6:48 PM GMT)

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி சாலையை ஆக்கிரமித்து தென்னிந்திய நடிகர் சங்கம், கட்டிடம் கட்டுவதாக தியாகராயநகரை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் ஆணையராக இளங்கோவன் என்ற வக்கீலை ஐகோர்ட்டு நியமித்தது. அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, நடிகர் சங்கம் எந்த ஆக்கிரமிப்பிலும் ஈடுபடவில்லை எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால், மனுதாரர்கள் சார்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தபால் நிலையம் இருந்ததாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக தலைமை தபால் அதிகாரியும், மாநகராட்சியும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநகராட்சி சார்பில் 1940 மற்றும் 1970 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தியாகராயநகர் அபிபுல்லா சாலையின் வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல தபால்துறை சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘நடிகர் சங்கம் பொது சாலையை ஆக்கிரமித்துவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க மனுதாரர்களுக்கு பலமுறை சந்தர்ப்பம் வழங்கியும் அவர்கள் நிரூபிக்கவில்லை. எனவே, நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


Next Story