போலீஸ் வேலைக்கு உடல்தகுதி தேர்வு; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு


போலீஸ் வேலைக்கு உடல்தகுதி தேர்வு; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 July 2017 10:45 PM GMT (Updated: 27 July 2017 7:27 PM GMT)

தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

சென்னை, 

தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் நடந்த தேர்வில் இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். 31-ந் தேதி பெண்களுக்கு தனியாக தேர்வு நடக்கிறது.

தமிழக போலீஸ் துறைக்கு 13,137 இரண்டாம் நிலை காவலர்களும் (பெண் காவலர்கள் உள்பட), சிறைத்துறைக்கு 1,015 இரண்டாம்நிலை சிறை காவலர்களும், தீயணைப்பு துறைக்கு 1,512 வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இதற்காக 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். திருநங்கைகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதற்கான எழுத்து தேர்வு மே மாதம் 21-ந் தேதி தமிழகம் முழுவதும் 410 மையங்களில் நடந்தது. 4.82 லட்சம் பேர் கலந்துகொண்ட எழுத்து தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர்.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 15 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை உடல் தகுதி தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் கலந்துகொள்ள 530 பெண்கள் உள்பட 3,336 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. நாளை (சனிக்கிழமை) வரை ஆண்களுக்கான முதல்கட்ட உடல் தகுதி தேர்வு நடக்கிறது.

நேற்றைய தேர்வுக்கு ஆயிரம் பேர் அழைக்கப்பட்டதில் 91 பேர் கலந்துகொள்ளவில்லை. முதலில் உயரம், மார்பளவு அளந்து பார்த்ததில் 739 பேர் தான் தகுதி பெற்றனர்.

அவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இந்த தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஓட்டப்பந்தயத்தில் இளைஞர்கள் மிக ஆர்வமாக கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு தனியாக 31 மற்றும் 1-ந் தேதிகளில் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இதற்காக எழுத்து தேர்வில் வெற்றிபெற்ற 530 பெண்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் திருநங்கைகளும் இருப்பதாக தெரிகிறது.

2-ந் தேதி முதல் ஆண்களுக்கு 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெறும். உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடக்கும்.

சென்னையில் நடந்த உடல் தகுதி தேர்வு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை கமிஷனர்கள் ஜெயலட்சுமி, சவுந்திரராஜன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நடந்தது.

ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் உடனே சிகிச்சை அளித்தனர். போட்டிகள் அனைத்தும் வீடியோ படம் எடுக்கப்பட்டது.

Next Story