அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம் எப்போது? ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம் கருத்து


அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம் எப்போது? ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம் கருத்து
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 4:20 PM GMT)

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்குவது எப்போது? என்பது குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் இருந்தே 3 நிபந்தனைகளை விதித்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை, கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருக்கக்கூடாது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை, ஜெயலலிதா நினைவு இல்லம் ஆகிய 2 நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான வி‌ஷயம் காரணமாகவே இணைப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிபந்தனையில் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்துள்ளதாக தெரிகிறது. அணிகள் இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமியும், நிகழ்ச்சிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வமும் சசிகலா குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

அணிகள் இணைப்புக்கு பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏற்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு வெகுவிரைவில் கூட்டப்படும். அதில், சசிகலாவை கட்சியின் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டிய நடவடிக்கையையும் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம் என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

அணிகள் இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அணிகள் இணைப்புக்கு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. பொதுச் செயலாளர் பதவி குறித்து பொதுக்குழு கூடி தான் முடிவு எடுக்க வேண்டும். சிலர் அதுபற்றி கருத்து கூறியிருப்பது, தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்க முடியும்’’ என்றார்.


Next Story