அ.தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது என்பதில் மக்கள் உறுதி; மு.க.ஸ்டாலின் பேட்டி


அ.தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது என்பதில் மக்கள் உறுதி; மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 8:36 PM GMT)

‘‘அ.தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்’’, என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– அ.தி.மு.க.வில் உள்ள குழப்பங்களின் காரணமாக தமிழக அரசால் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறதே?

பதில்:– அதைத்தான் நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக, இருந்தபோதுதான் சேகர் ரெட்டியையும், ஊழலையும் அறிமுகப்படுத்தியவர் என்றவர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ஊழல் சாம்ராஜ்ஜியங்களை நடத்தி கொண்டிருக்கும் அந்த இருவரும் இணையக்கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது. அதைதான் நாங்கள் ஏற்கனவே, ‘இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று சொன்னோம். அந்த நிலைதான் இன்று இருக்கிறது. இந்தக் கொடுமைகளை எல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான தீர்ப்பை வரும் காலகட்டத்தில் மக்கள் தெளிவாக வழங்குவார்கள்.

கேள்வி:– இரு அணிகள் இணைப்புக்காக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.500 கோடி கைமாறி இருப்பதாகவும், இன்னும் பேரம் நடைபெற்று வருவதாகவும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:– இந்த கேள்விவை ஓ.பன்னீர்செல்வத்திடமும், வெற்றிவேல் எம்.எல்.ஏ.விடமும் தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் ஏற்கனவே தெளிவாக, ‘இந்த இணைப்புக்கான முயற்சியை டெல்லியில் இருந்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, மிரட்டி, அச்சுறுத்தி, அடிபணிய வைக்கும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் நடைபெறும் கதை, வசனம், டைரக்‌ஷன் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் இங்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்’, என்று குறிப்பிட்டேன்.

கேள்வி:– அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களே?

பதில்:– அவர்கள் எங்கு செல்கிறார்கள்? எங்கு வருகிறார்கள்? என்றெல்லாம் நான் உங்களைப் போல புலனாய்வு செய்யவில்லை. எனவே, அதையெல்லாம் நீங்கள் தான் கண்டறிந்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கேள்வி:– சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?

பதில்:– மக்கள் பிரச்சினைகள் எதையுமே அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இப்படியெல்லாம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆட்சி தொடரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே, சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.  மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.


Next Story