தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல் அமைச்சரை மாற்ற கோரிக்கை


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல் அமைச்சரை மாற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2017 4:56 AM GMT (Updated: 22 Aug 2017 4:56 AM GMT)

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது. விளாத்திக்குளம் எம்எல்ஏ உமா மகேஸ்வரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது  இதை தொடர்ந்து தினகரன்  இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர்  இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு  டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இரவு 8.25 மணிக்கு வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், எஸ்.டி.ஜே.ஜக்கையன், சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஜெயலலிதா நினைவிடம் வந்தனர். டி.டி.வி.தினகரன் வரவில்லை.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும், நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்தனர். 20 நிமிட தியானத்துக்கு பிறகு, ‘சசிகலா வாழ்க... டி.டி.வி.தினகரன் வாழ்க’ எனும் கோ‌ஷங்களுடன் நினைவிடத்தை சுற்றி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள்  தமிழக கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். இன்று காலை 10 மணிக்கு இந்த சந்திப்புக்கு கவர்னர் அனுமதி அளித்திருக்கிறார். கவர்னரை சந்தித்து, இதுகுறித்து பேசுவோம். சந்திப்புக்கு பிறகு மற்ற வி‌ஷயங்களை உங்களிடம் தெரிவிக்கிறோம் என கூறினர். அதன்படி இன்று கவர்னர் மாளிகைக்கு  தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள்  வந்து உள்ளனர்.  கவர்னரிடம் கடிதம் ஒன்றை அளிக்க உள்ளனர்.

தற்போது விளாத்திகுளம் எம்.எல் ஏ உமா மகேஸ்வரியும்  டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதனால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது.

இது குறித்து மாரியப்பன் கென்னடி எம். எல் ஏ கூறும் போது  முதலமைச்சர் பழனிசாமி சரிவர செயல்படாததால், அவரை மாற்ற கவர்னரிடம்  கோரிக்கை விடுக்க உள்ளோம் என கூறினார்.

ஜக்கையன் எம்.எல்.ஏ கூறியதாவது:- ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எங்கள் பலம் இன்று தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்

Next Story