பழனிசாமிக்கு 19 எம்.எல்.ஏ. ஆதரவு வாபஸ் ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் உள்பட கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்


பழனிசாமிக்கு 19 எம்.எல்.ஏ. ஆதரவு வாபஸ் ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் உள்பட கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Aug 2017 12:15 AM GMT (Updated: 22 Aug 2017 6:44 PM GMT)

எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தினகரன் ஆதரவாளர் களான 19 எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.

இதனால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளின் எண்ணிக்கை 113 ஆக இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

அந்த 3 பேரின் ஆதரவு கிடைத்தாலும், அ.தி.மு.க.வின் பலம் 116 ஆகத்தான் இருக்கும். ஆனால் சட்டசபையில் தனி மெஜாரிட்டிக்கு 117 பேரின் ஆதரவு தேவை.

மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கை குறைந்து இருப்பதால் சட்டசபையை உடனே கூட்டி, ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக வழங்கியுள்ள கடிதங்களை அடுத்து, தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து, வரலாறு காணாத அரசியலமைப்பு சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு சூழ்நிலை ஒன்றின்போது, அப்போதைய கர்நாடக மாநில முதல்-அமைச்சர் எடியூரப்பாவை, கர்நாடக மாநில கவர்னர் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதங்களை கொடுத்த நாளிலேயே உத்தரவிட்டார்.

முதல்-அமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏதாவது ஏற்படும் நிலையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான அரசு தொடரவும், பேரவையின் நம்பிக்கையை பெறுவதில் நிலை நாட்டப்பட்டுள்ள ஜனநாயக மரபுகளை தகர்ப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் அமைந்துவிடும்.

மேலும், தற்போது பதவியில் உள்ள முதல்-அமைச்சர் கடந்த முறை பெரும்பான்மை நிரூபித்தபோது நடந்தது போலவே, குதிரை பேரம் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் சூழலுக்கு வழியேற்படுத்தி விடும்.

ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், எடப்பாடி பழனிசாமி உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டு, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் புகழ்மிக்க தீர்ப்பில் சுட்டிக் காட்டிய அரசியலமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் கூறுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லாததால், தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு அளித்து இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:- அவர்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றுள்ள 3 கட்சிகளைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரும் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று எழுதிக் கொடுத்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

ஆகவே, 22 பேர் கவர்னரிடம் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கடிதம் கொடுத்திருப்பதாக கேள்விப்படுகிறேன். ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் முன்பு 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கவர்னரிடம் கடிதம் கொடுத்தபோது, உடனடியாக தேதியை முடிவுசெய்து, நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார்.

அதேபோல, இப்போது 22 பேர் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், தங்களுடைய ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். எனவே, உடனடியாக நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும். அதற்குரிய வகையில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அதனை அவர் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- இப்போதைய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கும், இந்த ஆட்சியை கலைப்பதற்கும் தி.மு.க. முயற்சி மேற்கொள்ளுமா?.

பதில்:- “ஊழலுக்கு எதிராகப் போர் தொடுத்திருக் கிறேன்” என்று இந்திய நாட்டின் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று வீர உரையாற்றி இருக்கிறார். ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஊழலின் உறைவிடமாக இருக்கக்கூடிய, ஊழலில் திளைக்கும் இரு அணிகளை ஒன்றாக்கி, அந்த ஊழல் அணிகளை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவதற்கு அவர் துணை நின்றிருக்கிறார். அதற்கு சாட்சியாக அவரே வாழ்த்து சொல்லியும் இருக்கிறார்.

இந்தநிலையில், தி.மு.க.வை பொறுத்தவரையில், இந்த ஆட்சிக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவை 22 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டு இருப்பதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், கவர்னர் அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும், அப்படியொரு நிலை வரும் என்று சொன்னால், தி.மு.க. ஆழ்ந்து பரிசீலித்து, நிச்சயமாக ஒரு நல்ல முடிவை, உரிய வகையில் எடுக்கும்.

கேள்வி:- அடுத்த 6 மாதங்களுக்கு சட்டசபையை கூட்டப்போவதில்லை, அப்படி கூட்டு வதற்கு 40 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை அளிக்க வேண்டும் என்ற நிலையில், உங்கள் நிலைப்பாடு என்ன?.

பதில்:- இன்றைக்கு 22 உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில், கவர்னர் நியாயமாக நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றத்தை உடனே கூட்டுமாறு உத்தரவிட வேண்டும். அப்படி உத்தரவிடவில்லை என்றால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியை தி.மு.க. நிச்சயம் பரிசீலிக்கும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தலைமையிலான அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதன் பெரும்பான்மையை இழந்துவிட்டது.

19 உறுப்பினர்கள் வெளிப்படையாக ஆதரவை திரும்பப் பெற்றிருப்பதாலும், மேலும் பல உறுப்பினர்கள் அரசு மீது கடுமையான மனவருத்தத்தில் இருப்பதாலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கவர்னர் ஆணையிடுவதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியான செயலாக அமையும்.

எனவே, பேரவையை அடுத்த 3 நாட்களில் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆவியோடு பேசியதாக சொல்லி காவியாலே ஏற்படுத்தப்பட்ட பாரதீய ஜனதாவின் பினாமி அரசு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவதால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்தவித நன்மையும் இல்லை. பணம் மற்றும் பதவியை பகிர்ந்து கொள்வதற்காக மத்திய பாரதீய ஜனதா அரசால் நடத்தப்பட்ட நாடகம் இது.

எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி ஊழல் புகார்களை தெரிவித்தனர். ஊழல் புகார் செய்த இருவரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவியை மோடி அரசின் உத்தரவுக்கு ஏற்ப ஏற்றுக்கொண்டனர். இப்போது தமிழக அரசுக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்பதை நிரூபிக்க வேண்டும். கவர்னர் சட்டசபையை கூட்டி புதிய அரசுக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தமிழகப் பொறுப்பு கவர்னரை சந்தித்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு போதுமான பலத்தை இழந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தைக் கூட்டி தனது ஆட்சிக்குள்ள பலத்தை நிரூபிக்க வேண்டும். இதை தமிழக பொறுப்பு கவர்னரும் வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

என்.ஆர்.தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆளும் அ.தி. மு.க. இரண்டு அணிகள் இணைந்த போதிலும் தினகரன் தலைமையில் 19 எம்.எல்.ஏ.க்கள் தனியாக பிரிந்து சென்றுள்ளனர். அ.தி.மு.க. வில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரையும் வெளியேற்றுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றி முறைப்படி பொதுக்குழுவில் அறிவிப்பதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அரசு இறங்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், சில எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து நிற்கின்றது.

மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாத பெரும்பான்மையை இழந்த அ.தி. மு.க. எடப்பாடி அரசை ஜனநாயக முறையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு ஜனநாயகத்தின் இறக்கைகள் வெட்டப்பட்டு, இப்போதுள்ள ஆட்சி தாமரை இலை தண்ணீர் போல தத்தளிக்கும் நிலையில் அவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க் கள் 19 பேர் கவர்னரை சந்தித்துள்ளனர். இன்றைய முதல்- அமைச்சருக்கு கொடுத்து வந்த ஆதரவினை தாங்கள் விலக்கிக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டனர்.

ஓராண்டாக நீடிக்கும் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், உடனே ஆளும் அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தச் சொல்லி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டிட ஒரு வாரத்திற்குள் காலக்கெடு கொடுத்து, அரசியல் சட்ட நடைமுறைப்படி செய்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து அதிகார நாற்காலியை விட்டு இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்துவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டிய கவர்னர் உடனடியாக எடப்பாடி பழனிசாமி அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கட்டளை பிறப்பிப்பதைத் தவிர அவருக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story