சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய விமான சேவை


சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய விமான சேவை
x
தினத்தந்தி 22 Aug 2017 10:15 PM GMT (Updated: 22 Aug 2017 7:26 PM GMT)

சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவையை வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

ஆலந்தூர்,

தென்மண்டல ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வருகிற 30-ந் தேதி முதல் தினசரி புதிய விமான சேவையை தொடங்குகிறது.

இந்த விமான சேவையில், சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது. இதில் 70 பயணிகள் பயணம் செய்ய முடியும்,

சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 7.35 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும். இதேபோல் திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 10.20 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு காலை 10.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானம், பகல் 1.55 மணிக்கு திரும்பி வரும். பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை சென்று விட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வரும். மாலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானம் இரவு 10.05 மணிக்கு சென்னை திரும்பி வரும். ஒரு நாளைக்கு ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே விமான சேவை அளிக்க இயலும்.

மேலும் சிறிய ரக விமானங்கள் வந்தபின்னர் காலை, மாலை என தினமும் 2 முறை விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதவிர தூத்துக்குடி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். பயணம் செய்ய உள்ள தினத்தில் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். பயணிகளின் ஆதரவை பொறுத்தே விமான சேவை அதிகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story