நடிகர் சங்க நிர்வாகிகள் மீது மோசடி புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு


நடிகர் சங்க நிர்வாகிகள் மீது மோசடி புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Sep 2017 9:15 PM GMT (Updated: 23 Sep 2017 7:12 PM GMT)

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது மோசடி புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,

நடிகர் சங்க நிர்வாகிகள் மீதான மோசடி புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் வராகி. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட நடிகர் சங்கம் முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இதன் ஒளிபரப்பு உரிமையை ரூ.6 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு தனியார் டி.வி. ஒன்றுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் வழங்கினர். இதன்மூலம் நடிகர் சங்கத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை அவர்கள் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் 1.10.2016 அன்று புகார் செய்தேன். அந்த புகார் மனு விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எனது புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். முடிவில், ‘மனுதாரர் அளித்த புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும். புகாரில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story