கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு: ம.நடராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை


கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு: ம.நடராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 23 Sep 2017 9:15 PM GMT (Updated: 23 Sep 2017 7:25 PM GMT)

கல்லீரல் செயல்திறன் குறைந்ததால், ம.நடராஜனுக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை,

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் மருத்துவ கல்லூரி மற்றும் குளோபல் மருத்துவமனையில் பணியாற்றும் பிரபல கல்லீரல் சிகிச்சை அளிக்கும் டாக்டர் முகமது ரேலா உள்ளிட்ட டாக்டர் குழுவினர் ம.நடராஜனை பரிசோதித்து ‘தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில்’ அனுமதித்திருந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

நாள்பட்ட கல்லீரல் நோய்

நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக அவருக்கு, கல்லீரல் செயல் இழந்ததுடன், சிறுநீரகமும் செயல் இழந்து, நுரையீரலில் நீர்கோர்த்தது. இதனால் பல உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டு திடீரென்று ம.நடராஜனுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.

எனவே அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை அவசரமாக தேவைபட்டதால், உறுப்புதானம் அளிப்பவர்களிடம் இருந்து கல்லீரல் தானமாக பெற்று பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் சற்று உடல்நிலை தேறிவந்தது. இதனால் டாக்டர்கள், ம.நடராஜனை தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் இருந்து, வழக்கமான நோயாளிகள் சிகிச்சை பெறும் தனி அறைக்கு அனுப்பிவைத்து, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இதனால் மீண்டும் அவர் தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குணமடைய வாய்ப்பு

இதுகுறித்து ம.நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறுகையில், “தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டில், காத்திருப்போர் பட்டியலில் அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவாக கல்லீரல் தானமாக கிடைத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லீரல் பொருத்தப்பட்டால், அவர் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது” என்றனர்.

Next Story