செந்தில்பாலாஜியின் உறவினரிடம் அதிகாரிகள் விசாரணை


செந்தில்பாலாஜியின் உறவினரிடம் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 25 Sep 2017 9:15 PM GMT (Updated: 25 Sep 2017 8:01 PM GMT)

செந்தில்பாலாஜியின் உறவினர் உள்பட 4 பேரிடம் திருச்சியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

திருச்சி,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆவார். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ஆவார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலருக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, பணமோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

செந்தில்பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் பலர் கரூரில் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய நிறுவனங்களில் வரிஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 21-ந் தேதி வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். செந்தில்பாலாஜியின் உறவினரான தியாகராஜனின் ஜவுளிநிறுவனம், அவரது வீடு உள்பட அடுத்தடுத்து 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையின்போது, கடந்த 22-ந் தேதி வரிஏய்ப்பு புகார் காரணமாக செந்தில்பாலாஜியின் ஆதரவாளரான தாரணி சரவணனின் நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டி வருமானவரி துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதையடுத்து 4 நாட்களாக நடந்த சோதனை நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையை தொடர்ந்து செந்தில்பாலாஜியின் உறவினர் தியாகராஜன், நண்பர் சாமிநாதன், நவ்ரங் சுப்பிரமணி, ஒப்பந்ததாரர் சங்கர் உள்பட 10 பேரை திருச்சி வருமானவரி துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

மேலும், வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும், செந்தில்பாலாஜிக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவருக்கும் சம்மன் அனுப்பப்படும். சம்மன் அனுப்பி அவர் ஆஜராகாவிட்டால், அவரை தேடப்படும் நபர் என அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே செந்தில்பாலாஜியின் உறவினரான தியாகராஜன், நண்பர்கள் சுப்பிரமணி, சாமிநாதன் உள்பட 4 பேர் நேற்று காலை காரில் திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள வருமானவரி துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து ஆடிட்டர்கள் சிலரும் வருமானவரி துறை அலுவலகத்துக்கு சென்று வந்தனர். திருச்சி வருமானவரி துறை அலுவலகத்தில் செந்தில்பாலாஜியின் உறவினர் மற்றும் நண்பர்கள் ஆஜரானதை தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story