முதல்-அமைச்சர் பதவி : கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு


முதல்-அமைச்சர் பதவி : கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
x
தினத்தந்தி 26 Sep 2017 12:30 AM GMT (Updated: 25 Sep 2017 9:17 PM GMT)

முதல்-அமைச்சர் பதவி மூர் மார்க்கெட்டில் விற்கப்படும் பொம்மையா? என்று நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி கூறியுள்ளார்.

சென்னை, 

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை சாந்தோமில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. எனவே, தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களும் அரசுடன் சேர்ந்து பணியாற்றினால் டெங்குவை ஒழிக்க முடியும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விசாரணைக்கான நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெறுவார்கள். அதில் இருந்து யாராலும் தப்பிக்கவே முடியாது. இதில் ஒளிவு மறைவு கிடையாது. முதல்-அமைச்சர் அறிவித்தபடி விரைவில் நீதிபதி கமிஷன் அமைக்கப்படும். அந்த கமிஷன் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்.

என்னை பொறுத்தவரை, விசாரணை கமிஷன் வேலையை தொடங்கிய பிறகு, ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் யார் யார் சென்று பார்த்தார்கள்?, நீங்கள் (பொதுமக்கள்) என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். விசாரணை கமிஷன் குறித்து முதல்-அமைச்சர் அறிவித்த பிறகு இதுபற்றி விரிவாக பேச விரும்பவில்லை. விசாரணை கமிஷனில், அமைச்சர்கள் இப்போது வெளியில் தெரிவிக்கும் கருத்துகளை கமிஷனிடமும் தெரிவிக்கத்தான் போகிறார்கள். யார் யார் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் சொன்னார்களோ அவர்களிடம் கமிஷன் கண்டிப்பாக விசாரிக்கும். அதன் அடிப்படையிலேயே விசாரணை அறிக்கை இருக்கும். அப்போது, இடைத்தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா கைவிரல் ரேகை வைத்த விஷயமும் கண்டிப்பாக தெரியவரும்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று கூறி இருப்பதாக கேட்கிறீர்கள். அவர்களுடைய ஆட்சி காலத்தில் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். அதற்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணையா நடைபெற்றது?. மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா?. அந்த பழமொழி அவருக்குத்தான் பொருந்தும். தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது. அவருடைய ஆட்சியில் எத்தனை சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது என்பதை தெரிவிக்க வேண்டும்.

டி.டி.வி.தினகரனிடம் 5 சதவீதம் அளவுக்குத்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 95 சதவீத உறுப்பினர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள். 5 சதவீதம் உள்ள அவருக்கு கட்சி சட்டதிட்ட விதிப்படி பொதுக்குழுவை கூட்ட உரிமை இல்லை. எந்த தகுதியும் இல்லாமல் பொதுக்குழு கூட்டுவேன் என்பது வேடிக்கையாக உள்ளது, விநோதமாக உள்ளது, நகைப்புக்குரியதாக உள்ளது.

மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்தனர். யாரும் 100 நாளில் முதல்-அமைச்சராவேன் என்று சொல்லவில்லை. சினிமா 100 நாள் ஓடுவதுபோல் கமல்ஹாசன் முதல்-அமைச்சர் ஆவேன் என்று கூறுகிறார். முதல்-அமைச்சர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் பொம்மையா?. மக்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நடிகர் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்து ஒரு எம்.எல்.ஏ.வாகக் கூட முடியவில்லை. கூட்டம் கூடுவதை வைத்துக்கொண்டு முதல்-அமைச்சர் ஆவேன் என்று சொல்ல முடியாது. அது ஓட்டாக மாற வேண்டும். ஓட்டாக மாற மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். டுவிட்டரில் மட்டும் இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையில் மக்களை சந்தித்து, மக்களோடு மக்களாக அவர் இருந்து நல்லது செய்ய வேண்டும். முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். மற்றதை அப்புறம் பார்த்துக்கொள்வோம்.

எங்களை பொறுத்தவரை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஒற்றுமையுடன் அம்மா (ஜெயலலிதா) என்ற தேரை வடம்பிடித்து இழுத்து சென்று கொண்டிருக்கிறோம். அதில் ஒருவர் அச்சாணியை உருவ முயன்றால் அவரை அ.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாரை பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. ஜெயலலிதா கூறியபடி வலிமையான இயக்கமாக வருங்காலத்தில் அ.தி.மு.க. இருக்கும். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story