கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணியை தொடங்கி விட்டேன் நடிகர் கமல்ஹாசன் பேட்டி


கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணியை தொடங்கி விட்டேன் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 26 Sep 2017 12:45 AM GMT (Updated: 25 Sep 2017 9:23 PM GMT)

ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் அரசியலுக்கு வரவில்லை. புதிய கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஒரு நடிகனாக மக்களை மகிழ்வித்தீர்கள். அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- இடம்பிடிக்க முடியும் என்று மக்கள் நினைப்பதாக எனக்கு செய்தி வந்து கொண்டு இருக்கிறது. அதனால் முடியும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன் என்று கூறியிருக்கிறீர்களே? அப்படி நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா? நீங்கள் எந்த தொகுதியில் நிற்பீர்கள்?

பதில்:- இதற்கு ஒரு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. நான் கொடுத்த ஆங்கில பேட்டியின் தமிழாக்கமாக இது வந்துள்ளது. 100 நாட்களில் நான் வருவேன் என்று காலஅவகாசம் எதையும் சொல்லவில்லை. என்னை பேட்டி எடுத்தவர் 60 நாட்களில் அரசியலுக்கு வருவீர்களா? 100 நாட்களில் வருவீர்களா என்று கேட்டார். நான் வருவேன் என்றுதான் கூறமுடியும். எத்தனை நாள் என்று சொல்ல முடியாது என்றேன். 100 நாட்களில் வருவீர்கள் என்று வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று பதில் சொன்னேன். எனவே நான் 100 நாட்களில் வருவேன் என்று பிரகடனப்படுத்தியதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.

கேள்வி:- அரசியலில் என்ன கொள்கைகளை முன்னிறுத்தப்போகிறீர்கள்?

பதில்:- கொள்கை குறிப்புகள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். முழு உருவப்படத்தையும் பார்க்க வேண்டும் என்றால் முழுவதுமாக அதற்கான ஏற்பாடுகளை செய்து ஆய்ந்து, ஆராய்ந்து வாதாடி வழக்காடி பிறகு வரும் விஷயத்தைத்தான் நாங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டுமே தவிர அவசரப்பட்டு இப்போது சொல்ல முடியாது. தெளிவாக தெரிந்த முதல் விஷயம் மேலெழுந்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது. அது நாடெங்கிலும் பேசப்படும் பேச்சு. தமிழ்நாட்டில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு மெத்தனம் கூடி விட்டது, பயம் போய் விட்டது. அரசியல்வாதிகளுக்கு என்ற கோபம் மக்களிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை.

கேள்வி:- அரசியல் குருவாக யாரை ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?

பதில்:- ஒருவரை ஏற்றுக்கொண்டால் என்மீது கட்சி சாயம் பூசி விடுவீர்கள். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் பலர் இருக்கிறார்கள். சினிமாவில் என் குரு என்று சிவாஜி அவர்களை மட்டும் சொன்னால், அது பொய்யாக இருக்கும். பாலையா அண்ணனும் இருக்கிறார். நாகேசையும் சொல்ல வேண்டும். சண்முகம் அண்ணாச்சியை சொல்ல மறந்தேன் என்றால் துரோகம். பாலசந்தர் நடிப்பு எனது நடிப்பில் இருக்கிறது என்பதும் கூட உண்மை. அதுபோல் பலர் இருக்கிறார்கள். புதிய அரசியல்வாதிக்கு பன்முக தன்மை தேவை என்பது எனது கருத்து.

கேள்வி:- தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளால் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீங்கள் திராவிட கொள்கைகளை மட்டும் முன்னிறுத்தி அரசியலில் சாதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்:- அப்படி நினைக்கவில்லை நான்.

கேள்வி:- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, ஆட்சியாளர்கள் மீது ரசிகர்கள் மூலம் ஊழல் ஆதாரங்களை அனுப்புவது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு என்று நீங்கள் தொடர்ந்து வெளியிடும் கருத்துகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?

பதில்:- தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகத்தான் நான் நினைக்கிறேன். அதற்கு சாட்சி, இந்த பேட்டி.

கேள்வி:- அரசியலுக்கு வரும் சூழலில் தனிகட்சி தொடங்குவதில்தான் உறுதியாக இருக்கிறீர்களா?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- பினராயி விஜயன், கெஜ்ரிவால் என்று அரசியல் தலைவர்களை தொடர்ந்து சந்திப்பதன் நோக்கம்?

பதில்:- அரசியல் கல்வி என்று சொன்னால் மிகையாகாது.

கேள்வி:- நீங்கள் முதல்-அமைச்சரானால் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்று எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

பதில்:- முதல்வரானால் என்று நீங்கள் சொல்லலாமே தவிர நான் சொல்லக்கூடாது. ஏனென்றால் அதுவல்ல எனது இலக்கு. மக்களுக்கான நல்ல விஷயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு நான் ஏதுவாக இருக்க வேண்டும். அப்படி வரவேண்டும் என்று சொன்னால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

கேள்வி:- சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறதே?

பதில்;- அது எதிர்ப்பு. அது இருக்கத்தான் செய்யும்.

கேள்வி:- வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் திட்டம் உண்டா?

பதில்:- இல்லை.

கேள்வி:- உங்கள் கட்சி பெயர், கொடி, சின்னம் தேர்வு செய்யும் பணியை தொடங்கி விட்டீர்களா?

பதில்:- தொடங்கியாகிவிட்டது. அது உடனே முடிந்து விடும் என்று அவசரப்படுவதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கேள்வி:- கட்சி அமைப்புகள், தேர்தல் அனுபவங்களில் வலுவாக இருக்கும் அரசியல் கட்சிகளை எதிர்கொள்வது உங்களுக்கு சவாலாக இருக்காதா?

பதில்:- கண்டிப்பாக பெரிய சவால் அது. அதில் பல பெரியவர்களும் இருக்கிறார்கள். அறிவாளிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிர் கருத்துகள் சொல்லும்போது என்னை அதற்கேற்ப உருவாக்கும் முயற்சிகள் அதிகமாக இருக்க வேண்டும்.

கேள்வி:- அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?

பதில்:- அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.

கேள்வி:- எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு தனி கட்சி தொடங்கிய நடிகர்கள் யாரும் பிரகாசிக்கவில்லையே?

பதில்:- எங்கள் குடும்பத்திலேயே பலர் சொன்னார்கள். வக்கீலாக வருவதுதான் நமது குடும்பத்து பழக்கம். இந்த மாதிரி கலைஞர்களாக வந்து விளங்கியது கிடையாது என்றார்கள். ஆர்மோனியம் வாசிக்கவும், மிருதங்கம் வாசிக்கவும் சென்ற உறவினர்களையும் காட்டினார்கள். அதை ஒரு அடையாளமாக எடுத்துக்கொள்ள முடியாது. நான் எடுத்துக்கொண்டது பெரிய வெற்றியாளர்களைத்தான். அதற்கு இரண்டு உதாரணங்களை நீங்களே சொல்லி விட்டீர்கள். அந்த உதாரணத்துடன்தான் ஆரம்பிக்க வேண்டுமே தவிர தோற்றவர்களை பார்த்து எதையும் திட்டமிடக் கூடாது.

கேள்வி:- அரசியலுக்கு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கும் திட்டம் உண்டா?

பதில்:- கண்டிப்பாக அது நிகழ்ந்தே தீரும். அந்த சுற்றுப்பயணங்கள் எனக்கு புதிதும் அல்ல. நாயகன் படத்தின் வெற்றிக்காக 18 ஊர்களுக்கு போய் இருக்கிறோம். இது தமிழகத்தின் வெற்றிக்கு. எத்தனை முறை எத்தனை ஊருக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

கேள்வி:- ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசிக்கும் தருணத்தில் நீங்களும் அரசியலில் குதிக்க தீவிரமாக முடிவு எடுத்து இருப்பது அவருக்கு போட்டியாகவா?

பதில்:- இல்லை. நான் வந்து இருப்பது எனக்கு தேவை என்று நான் நினைப்பதனால். இது என்னுடையை தேவை இல்லை. தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனால் நான் வருகிறேன். எனக்கு அனுமதியும் தருவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்து இருப்பதனால் தொடர்ந்து பேசி வருகிறேன்.

கேள்வி:- ரஜினியும், நீங்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்கள். அதை இருவரும் இணைந்து செய்யலாமே?

பதில்:- செய்யலாம். அது அவருடையை இஷ்டம். நான் இப்போது இங்கே இருக்கிறேன். அவர் வரும்போது அதெல்லாம் பேசக்கூடிய விஷயம்.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் எதிர்க்கிறார்களே?

பதில்:- எதிர்ப்பு இல்லாமல் எதுவும் இருக்காது. நாம் என்ன செய்தாலும் அதற்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். உடலுக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும். ஊருக்கு எது நல்லதோ அதை செய்து கொண்டு இருக்கிறேன்.

கேள்வி:- உங்கள் கட்சியை எப்போது முறைப்படி தொடங்குவீர்கள்?

பதில்:- அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம். அது முடிவதற்கு முன்னால் சொல்ல கூடாது. சமையல் முடிவதற்கு முன்னால் பரிமாறுவதை தொடங்க கூடாது. அது வேகனும். ரெடி என்று நாங்கள் நினைக்கும்போதுதான் அறிவிக்க வேண்டும். கொஞ்சம் பொறுமையோடு காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:- உங்கள் கட்சி எந்த கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்?

பதில்:- மாற்று என்றால் ஆளும் கட்சிகளைத்தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் பல நல்ல கருத்துகள் உள்ள கட்சிகள் ஆளும் வாய்ப்புக்கு அருகில் கூட வர முடியாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்களுடையை கருத்துகளும் இருக்கும். ஆளும் கட்சிகளில் பல குறைகள் இருந்தாலும் ஆரம்பத்தில் சில நல்ல விஷயங்கள் அவற்றிலும் இருந்தன. அதில் இருக்கும் நல்லவற்றையும் எடுத்துக்கொண்டுதான் செயல்படுவோம்.

கேள்வி:- மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களை வரவேற்பீர்களா?

பதில்:- நாங்கள் புதிய தலைவர்களை எதிர்பார்க்கிறோம். புத்தம் புது தலைவர்களையும், அவர்களுக்கு இருக்கும் உத்வேகத்தையும் நம்பித்தான் நான் இதில் இறங்கி இருக்கிறேன். பழைய தலைவர்களுக்கு அனுபவம் இருக்குமே தவிர இந்த அளவுக்கு ஆர்வம் இருக்குமா? என்று தெரியவில்லை.

கேள்வி:- சபாஷ் நாயுடு படம் பாதியில் நிற்கிறதே?

பதில்:- ஆமாம், விஸ்வரூபம்-2 படத்தை முடிக்க வேண்டும். சபாஷ் நாயுடு படத்தையும் முடிக்க வேண்டும். அதை முடிக்காமல் நான் பொதுச்சேவைக்கு போனேன் என்றால் என்னை நம்பி படத்தில் காசு போட்டு இருப்பவர்களெல்லாம் ஏமாந்து விடக்கூடாது. எனவே அந்த படங்களை முடித்து விட்டுத்தான் இங்கு வருவேன்.

கேள்வி:- அ.தி.மு.க.வில் நடந்து வரும் தகராறுகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- சிரிக்கலாம். வேறு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி இருப்பது பற்றி?

பதில்:- அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு அது செய்யப்பட வேண்டும். நிர்வாக குறைபாடுகளால் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு அது செய்யப்பட வேண்டும்.

கேள்வி:- அரசியல் ஆர்வம் உங்கள் தந்தையிடம் இருந்து வந்ததாக கருதுகிறீர்களா?

பதில்:- கண்டிப்பாக. சிறுவயதில் பெரிய தலைவர்கள் எனது வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். அவர்கள் மடியில் அமர்ந்து இருக்கிறேன். எனது கன்னத்தை அவர்கள் கிள்ளி இருக்கிறார்கள். டேய் யார் தெரியுமா இப்போது வந்தது என்று என் தந்தை கேட்பார். நான் காமராஜர் மாமா என்பேன். அப்படி சொல்லக்கூடாது பெருந்தலைவர் என்று சொல்ல வேண்டும் என்பார் எனது தகப்பனார்.

கக்கன், பக்தவச்சலம் போன்றோரெல்லாம் எனது வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். அப்போது எனது மூத்த சகோதரர் சாருஹாசன் வக்கீலாக இருந்தார். சினிமா, அரசியல் என்று இரண்டு பக்கத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. வாதங்களை என்னால் கேட்க முடிந்தது. ராஜாஜியும் எனது வீட்டுக்கு வந்து இருக்கிறார்.

எனது தகப்பனாரிடம், ஏன் நீங்கள் மந்திரியாக வந்து இருக்கலாமே உங்கள் நண்பர்கள் எல்லாம் மந்திரி ஆகிவிட்டார்களே என்று நான் கேட்டேன். அதற்கு நான் இதை நினைத்துதான் சுதந்திரத்துக்கு போராடினேன் என்று ஆகிவிடும். என் மனதே உறுத்தும். என் வேலை முடிந்து விட்டது. நீ வேண்டுமானால் வா என்றார். அப்போது நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். இப்படி வருவேன் என்று அப்போது தெரியாது.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். 

Next Story