“தமிழக அமைச்சர்கள் நிச்சயம் பதவி விலக நேரிடும்” தங்க தமிழ்செல்வன் பேட்டி


“தமிழக அமைச்சர்கள் நிச்சயம் பதவி விலக நேரிடும்” தங்க தமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 27 Sep 2017 12:00 AM GMT (Updated: 26 Sep 2017 10:12 PM GMT)

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் கூறிவரும் தமிழக அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்” என்று தங்க தமிழ்செல்வன் கருத்து தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

சென்னை பெசன்ட்நகரில் உள்ள அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு, அவரது ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்செல்வன் நேற்று இரவு வந்தார். அங்கு டி.டி.வி.தினகரனை சந்தித்த பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தங்க தமிழ்செல்வன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா மரணம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறதே?

பதில்:- ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் பேசிவருவதை பார்த்தால் எனக்கு வியப்பாகவும், அதேசமயம் சந்தேகமாகவும் இருக்கிறது. இவ்வளவு நாளாக வாயை மூடிக்கொண்டு இருந்த அமைச்சர்கள், தற்போது முன்னுக்கு பின் முரணாக அதாவது ஒருவர் ‘ஜெயலலிதாவை பார்த்தேன்’ என்கிறார், இன்னொருவர் ‘ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை’ என்கிறார். இத்தனை நாட்கள் கழித்து எதற்கு இந்த விதண்டாவாதம். இப்படி மாறுபட்ட கருத்துகள் கூறிவரும் அமைச்சர்கள் நிச்சயமாக பதவி விலக நேரிடும். விசாரணை கமிஷனின் நீதிபதி இந்த அமைச்சர்களை விசாரிக்கவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

கேள்வி:- ‘ஜெயலலிதாவை பார்த்தேன்’ என்று செல்லூர் ராஜூ கூறியதை ஏற்கிறீர்களா?

பதில்:- எல்லாரும் தான் ஜெயலலிதாவை பார்த்திருப்பார்கள். அது எப்படி பார்க்காமல் இருக்கமுடியும்? என்னை போன்ற எம்.எல்.ஏ. பார்த்திருக்க முடியாது. ஆனால் அமைச்சர்கள், மேல்மட்ட அதிகாரிகள், கவர்னர், மத்திய மந்திரிகள் எல்லோரும் சென்று ஜெயலலிதாவை பார்த்திருக்கிறார்கள். தற்போது கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் மனதில் டி.டி.வி.தினகரன் மிகப்பெரிய செல்வாக்கு பெற்று வருகிறார். அந்த செல்வாக்கை உடைக்க, வீண் பழி சுமத்தி, இப்படி ஒரு புரளியை கிளப்பி மக்களை திசை திருப்பலாம் என்று கணக்கு போடுகிறார்கள். இப்படிப்பட்ட பேச்சு இவர்களுக்கு பாதகமாகத்தான் அமையும்.

கேள்வி:- எடப்பாடி பழனிசாமி அரசு நன்றாக செயல்பட்டு வருவதாகவும், டி.டி.வி.தினகரன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளையும் தீபக் கூறியிருக்கிறாரே?

பதில்:- இத்தனை நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு கருத்தை தீபக் சொல்ல அவசியம் என்ன? ஆஸ்பத்திரியில் நான் இருந்தேன் என்று தீபக் கூறுகிறார். அப்படி அவர் இருந்தபோது என்னென்ன நடந்தது? என்பதை வெளிப் படையாக பேசவேண்டியது தானே? எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சொல்லிக்கொடுத்து தீபக் இப்படி பேசுகிறார்.

கேள்வி:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா ‘நைட்டி’ அணிந்து டி.வி. பார்க்கும் வீடியோ காட்சி வெளியிடப்படுமா?

பதில்:- ‘வீடியோ காட்சி எங்களிடம் உள்ளது. உரிய நேரத்தில் அந்த வீடியோ பதிவை தருவோம்’ என்று டி.டி.வி.தினகரன் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். அதையே நானும் கூறிக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

Next Story