“தமிழகம் டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டு இருக்கிறது” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


“தமிழகம் டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டு இருக்கிறது” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Oct 2017 11:45 PM GMT (Updated: 17 Oct 2017 7:41 PM GMT)

‘தமிழகம் டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டு இருக்கிறது’ என்றும், ‘மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை’, என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு நேற்று சென்றார். அங்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் ஒரு டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால், இந்தளவுக்கு மோசமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தநிலையில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்திய குழுவினரின் அறிக்கையில், ‘டெங்கு காய்ச்சல் என்பது ஒரு சாதாரண விஷயம். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ பொறுப்பேற்க முடியாது’, என்று அலட்சியமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெங்கு காய்ச்சலினால் நூற்றுக்கணக்கானோர் ஒருபக்கம் இறந்து கொண்டிருக்கும் போது, இதுபற்றியெல்லாம் ஆளும் கட்சி கவலைப்படாமல், ஆடம்பரமான கட்-அவுட்டுகள் வைத்து விழாக்கள் கொண்டாடும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக் கிறது. டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என்ற தவறான ஒரு தகவலை, திட்டமிட்டு இந்த அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே தடுக்கின்ற முயற்சியை தவறவிட்டுள்ள இந்த அரசு, இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையாவது காப்பாற்றுகின்ற பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய குழு வந்து மேற்கொண்ட ஆய்வினால் பயன் இருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:- அவர்களால் எந்தப் பயனும் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் என்னவென்றால் குழுவில் வந்தவர்கள் முறையான ஆய்வு எதையும் செய்யவில்லை. குறிப்பாக, டெங்கு பாதிப்பு எங்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. பொத்தாம் பொதுவாக, தவறான தகவலை வெளியிடும் அளவிற்குதான் வந்து சென்றார்களே, தவிர முறையான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.

கேள்வி:- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசிடம் ரூ.256 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளதே?

பதில்:- அதில் ஏதாவது கமிஷன் வாங்க முடியுமா?, கொள்ளையடிக்கலாமா? என்று நிதியுதவி கேட்டு இருப்பார்களே தவிர, டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கேட்டிருக்க மாட்டார்கள்.

கேள்வி:- நிலவேம்புவை அதிகமாக பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று சொல்லப்படும் நிலையில், அதுகுறித்து அரசு எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறதே?

பதில்:- இதற்கான பதிலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, சொல்ல வேண்டும்.

கேள்வி:- உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முதல்-அமைச்சர் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு கேட்டிருக்கிறாரே?

பதில்:- அவசியம் அவருக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், டெங்கு காய்ச்சல் அவரை ஒருவேளை தாக்கி விடுமோ? என்ற அச்சத்தில் அவர் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்.

மேற்கண்டவாறு மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.

Next Story