தீபாவளி பட்டாசு வெடிப்பால் கடந்த ஆண்டை விட காற்று மாசுவின் அளவு அதிகம்


தீபாவளி பட்டாசு வெடிப்பால் கடந்த ஆண்டை விட காற்று மாசுவின் அளவு  அதிகம்
x
தினத்தந்தி 19 Oct 2017 5:11 AM GMT (Updated: 19 Oct 2017 5:10 AM GMT)

தீபாவளி பட்டாசுகளால் ஏற்பட்ட புகையால் சென்னை மாநகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம்போல், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி கொண்டாடினர். அதேபோல், தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, அனைத்து ஊர்களிலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆனால், முந்தைய ஆண்டுகளை போல், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பது குறைந்தது; வானில் வர்ணஜாலம் காட்டும், வண்ண, பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் வெடித்ததால் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள், சரிவர தெரியாததால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். 

மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், சராசரி அளவை காட்டிலும், காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மழையின் தாக்கம் எதுவும் இல்லாததால் காற்று மாசுவின் அளவு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட, நுண்துகள்கள் காற்றில் அதிகளவில் கலந்ததால், சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இதனிடையே, புகை மூட்டத்தால், அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மின்சார ரயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டன.

புகைமூட்டத்தால் விமானங்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்றில் மாசு அதிகரிப்பதாகக் கூறி டெல்லியில் பட்டாசு விற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதைப்போல் சென்னையிலும் பட்டாசு விற்க தடை கொண்டு வரலாம் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Next Story