தீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.244 கோடி


தீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.244 கோடி
x
தினத்தந்தி 19 Oct 2017 11:45 PM GMT (Updated: 19 Oct 2017 6:45 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு ரூ.244 கோடி மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.4 சதவீதம் குறைவு ஆகும்.

சென்னை,

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் ‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் வார நாட்களில் ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலும் சராசரியாக மது விற்பனை இருந்து வருகிறது.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுபிரியர்கள் கூடுதல் உற்சாகம் அடைவதால், அப்போது மது விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.244 கோடி மது விற்பனை நடந்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் (17-ந் தேதி) ரூ.113 கோடிக்கும், தீபாவளி பண்டிகை அன்று (18-ந் தேதி) ரூ.131 கோடிக்கும் என 2 நாட்களில் ரூ.244 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.108 கோடிக்கும், தீபாவளி அன்று ரூ.135 கோடிக்கும் என 2 நாட்களுக்கு ரூ.243 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. தற்போது மது கடைகள் எண்ணிக்கை குறைவு, மது வகைகள் விலை உயர்வு ஆகியவற்றின் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை 6.4 சதவீதம் குறைவு ஆகும்.

கடந்த 2016-17-ம் ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.29 ஆயிரத்து 680 கோடி வருவாய் கிடைத்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.29 ஆயிரத்து 175 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுபிரியர்களை கவரும் வகையில் பெரும்பாலான ‘டாஸ்மாக்’ கடைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. எனினும் மது விற்பனை குறைந்துள்ளது டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொதுவாக பண்டிகை காலங்களில் ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது ‘டாஸ்மாக்’ மது வகைகள் விலை உயர்த்தப்பட்டதும், டெங்கு பாதிப்பும் மதுபிரியர்களின் உற்சாகத்துக்கு தடை போடும் வகையில் அமைந்துவிட்டது.

தீபாவளி பண்டிகை மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மது விற்பனை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியையும், அரசுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

Next Story