மத்திய அரசின் நல்ல திட்டங்களை குறை சொல்வதா? நடிகர் விஜய் மீது தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்


மத்திய அரசின் நல்ல திட்டங்களை குறை சொல்வதா? நடிகர் விஜய் மீது தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்
x
தினத்தந்தி 19 Oct 2017 9:45 PM GMT (Updated: 19 Oct 2017 6:58 PM GMT)

‘மெர்சல்’ திரைப்படத்தில் மத்திய அரசின் நல்ல திட்டங்களை குறை சொல்லி தவறான கருத்து பரப்பப்படுகிறது.

திருவொற்றியூர்,

‘மெர்சல்’ திரைப்படத்தில் மத்திய அரசின் நல்ல திட்டங்களை குறை சொல்லி தவறான கருத்து பரப்பப்படுகிறது. படத்தில் உள்ள தவறான கருத்துகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருவொற்றியூர் தேரடியில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் நல்ல திட்டங்களை தவறாக முன்னிறுத்தி ஏதோ மத்திய அரசை எதிர்ப்பதுதான் நாகரிகம் என்ற சூழ்நிலையை நடிகர் விஜய் ஏற்படுத்தி இருக்கிறார். இதை பா.ஜனதா கடுமையாக கண்டிக்கிறது.

‘மெர்சல்’ திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றி தவறான கருத்து பரப்பப்படுவதாக அறிகிறேன். டிஜிட்டல் இந்தியா பற்றி சொல்கிறார்கள். சிங்கப்பூரை பற்றி பேசுகிறார்கள். சிங்கப்பூரில் வரிகள் மூலம் 80 சதவீத வருமானம் கிடைக்கிறது.

கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் சில லட்சம் பேரையாவது வரி கட்ட வைத்து உள்ளோம். 70 ஆண்டுகளாக நாடு ஊழலில் திளைத்தபோது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?. திரைப்படத்தில் நடிப்பவர்கள் சம்பளத்தில் வரிப்பணம் எவ்வளவு கட்டுகிறார்கள்? என்று சொல்வது உண்டா?.

மோடி அரசின் நல்ல திட்டங்களை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு எந்த வகையில் அருகதை இருக்கிறது. தவறான கருத்துக்களை மக்களிடம் எடுத்து செல்வது மிக தவறான நடவடிக்கை. இதை பா.ஜனதா கண்டிக்கிறது.

தவறான கருத்துகளை ‘மெர்சல்’ திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். கை தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக தவறான கருத்துக்களை சொல்லக்கூடாது. இது தட்டிக் கேட்கப்பட வேண்டும். விலங்குகள் நலவாரியம் அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. திரைப்படம் எடுக்கும்போது சட்ட விதிகளை மதிக்காமல் நீங்கள் திரைப்படம் எடுக்கிறீர்கள்.

பின்பு சட்டத்தையும், வரியையும், அரசாங்கத்தை பற்றியும் பேசுகிறீர்கள். நான் ரசிகர்களுக்கு சொல்வது, தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் ஒழிக்கப்பட்டு உள்ளது. இதை ஏன் பாராட்ட மறுக்கின்றீர்கள்?.

ஜி.எஸ்.டி. பொருளாதார நிலைமைப்பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?. தவறு இல்லாத திட்டங்கள் குறித்து குறை சொல்ல இவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வருகிறது?. இப்படி இவர்கள் அரசியலில் நுழைய வேண்டியது இல்லை. அரசியல் தலைவர்கள் இவற்றை பார்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் தெளிவான முடிவு எடுப்பார்கள். அவர்கள் டிக்கெட்டுகளையே நியாயமாக விற்க முடியவில்லை. வாங்கும் சம்பளத்தை நேர்மையாக மக்களிடம் சொல்ல முடியவில்லை. நேர்மையாக வரி கட்ட முடியவில்லை. இவர்கள்தான் குறை கூறுகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் ஆட்சி நடத்தும் பிரதமரின் திட்டங்களை குறை சொல்ல முடியாது. ஜி.எஸ்.டி. யில் இருந்த சின்ன சின்ன குறைபாடுகள் சரி செய்யப்பட்டு உள்ளது. மக்களுக்கு தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 53 லட்சம் பேர் முத்ரா வங்கியில் எந்தவித ஆதாரம் இல்லாமல் கடன் பெற்று உள்ளார்கள். அவர்களை கந்து வட்டியில் இருந்து காப்பாற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ், தலைவர் பாஸ்கர், நகர தலைவர் ஆனந்தன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story