தமிழகத்தில் 23-ந் தேதி வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 23-ந் தேதி வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2017 9:15 PM GMT (Updated: 19 Oct 2017 8:00 PM GMT)

தமிழகத்தில் 23-ந் தேதி வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை

வடகிழக்கு பருவமழையை அதிகம் நம்பி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. தென்மேற்கு பருவமழை இன்னும் முடிவடையவில்லை.

வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் அக்டோபர் 1-ந்தேதி முதல் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழக வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. விரைவில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று (வெள்ளிக்கிழமை) காலைக்குள் ஒடிசா கடற்கரையில் பூரி-சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு தூரத்தில் இருந்தாலும் சென்னை எண்ணூர், பாம்பன், காட்டுப்பள்ளி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

4 நாட்களுக்கு மழை தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருக்காட்டுப்பள்ளியில் 2 செ.மீ., தூத்துக்குடி, புள்ளம்பாடி, பூதப்பாண்டியில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Next Story