காந்திய கொள்கைகளை கடைபிடிப்பது காலத்தின் அவசியம் அமெரிக்க காந்தி பெர்னி மேயர் பேட்டி


காந்திய கொள்கைகளை கடைபிடிப்பது காலத்தின் அவசியம் அமெரிக்க காந்தி பெர்னி மேயர் பேட்டி
x
தினத்தந்தி 19 Oct 2017 10:15 PM GMT (Updated: 19 Oct 2017 8:13 PM GMT)

“அகிம்சை எனும் ஆயுதம் ஏந்தி, காந்திய கொள்கைகளை கடைபிடிப்பது காலத்தின் அவசியம்” என்று, அமெரிக்க காந்தி பெர்னி மேயர் கூறினார்.

சென்னை,

அமெரிக்கா நாட்டை சேர்ந்த துறவி பெர்னி மேயர். இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தபோது காந்தி பற்றி அறிந்து அவர் மீது ஈர்ப்பு கொண்டார். காந்தியை போலவே உடை அணிந்து, தனது தோற்றத்தையும் மாற்றிக்கொண்டார். உலக நாடுகளில் காந்திய கொள்கைகளின் அவசியத்தை பற்றி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்க காந்தி என்று அழைக்கப்படும் பெர்னி மேயர், சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதிக்கு நேற்று வந்தார். அங்கு காந்திய கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை படித்தார். காந்தி அடிக்கல் நாட்டிய கட்டிடத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஒருவன் உணர்ந்து நடந்தால், அவனால் தவறு செய்யவே முடியாது. தற்போது காலநிலை மாற்றம் காரணமாக காந்திய கோட்பாடுகளை ஒரு சிலர் மட்டுமே பின்பற்றுகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் அழிவுக்கான ஆயுதங்களை ஆர்வமாக தயாரிக்க தொடங்கிவிட்டனர். எனவே காந்திய கோட்பாடுகள் மறக்கப்பட்டு வருகின்றன.

அகிம்சை எனும் ஆயுதம் ஏந்தி காந்திய கொள்கைகளை கடைபிடிப்பது காலத்தின் அவசியங்களுள் ஒன்று. அதனை எதிர்கால சந்ததியினர் முன்னெடுக்கவேண்டும். தற்போது காந்திய கொள்கைகள் வெகு சிலரிடம் மட்டுமே இருப்பது வேதனை. அதனை விரிவாக்கம் செய்வதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தக்கர் பாபா வித்யாலயா சமிதியின் செயலாளர் பி.மாருதி உடனிருந்தார்

Next Story