ஜெயலலிதா மரணம் குறித்து அடுத்த வாரம் முதற்கட்ட விசாரணை தொடங்குகிறது


ஜெயலலிதா மரணம் குறித்து அடுத்த வாரம் முதற்கட்ட விசாரணை தொடங்குகிறது
x
தினத்தந்தி 20 Oct 2017 9:19 AM GMT (Updated: 20 Oct 2017 9:19 AM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து அடுத்த வாரம் முதற்கட்ட விசாரணை தொடங்குகிறது.

சென்னை,

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை அன்றிரவு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர் குழுவை அப்பல்லோ ஆஸ்பத்திரி நியமித்தது. அவர்கள் மட்டுமல்லாமல், தமிழக அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆகியோரும் தீவிர சிகிச்சை அளித்தனர். அதோடு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே உள்பட வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்களும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதியன்று  ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மறுநாள் 5-ந்தேதி அன்று இரவில் ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அன்று நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது. பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. கட்சி பிளவுபட்டது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார்.  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஒரு நிபந்தனையாக, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வற்புறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 17-ந்தேதியன்று தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றார்.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரண்டு அணிகளும் ஆகஸ்டு 21-ந்தேதி இணைந்தன.  இதனையடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 25.9.17 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி, சி.பி.ஐ. விசாரணை கோரி வருகின்றன. 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அடுத்த வாரம் புதன் கிழமை தனது முதற்கட்ட விசாரணையை தொடங்குகிறார். 

Next Story