2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: தமிழகத்தில் 3½ லட்சம் பேர் விண்ணப்பம்


2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: தமிழகத்தில் 3½ லட்சம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 23 Oct 2017 12:00 AM GMT (Updated: 22 Oct 2017 6:50 PM GMT)

தமிழகத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 3½ லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2018-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. அதன்படி கடந்த 3-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

மேலும், வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதியன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்களுடைய பெயர்களை சேர்த்து, புது வாக்காளர்களாக ஆகலாம் என்றும், புதிய வாக்காளர்களாக சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவம் 6-யையும், பெயர் நீக்கம் செய்பவர்கள் படிவம் 7-யையும், திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் படிவம் 8-யையும், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8ஏ-வையும் நிரப்பி கொடுக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதற்கான முதல் கட்ட சிறப்பு முகாம் கடந்த 8-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 66,074 வாக்குச்சாவடி மையங் களில் நடந்த இந்த சிறப்பு முகாமில் 1,69,269 பேர் புதிய வாக்காளர்களுக்கும், 30,288 பேர் பெயர் நீக்குவதற்கும், 30,718 பேர் திருத்தம் செய்வதற்கும், 16,413 பேர் முகவரி மாற்றம் செய்வதற்கும் என ஒட்டுமொத்தமாக 2,46,688 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்தநிலையில், 2-ம் கட்டமாக சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. சென்னையில் உள்ள 3,768 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் செய்தல் மற்றும் முகவரியை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை ஆர்வத்துடன் பூர்த்தி செய்து கொடுத்தனர். புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்து கொள்வதில் இளம் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வம் செலுத்தினர்.

முகாம்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று அவர்கள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். சிறப்பு முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற்றது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முகாமில் இருந்த அதிகாரிகள் உதவி செய்தனர்.

2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் 66,074 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 2,31,065 பேர் புதிய வாக்காளர்களுக்கும், 52,539 பேர் பெயர் நீக்குவதற்கும், 46,663 பேர் திருத்தம் செய்வதற்கும், 27,001 பேர் முகவரி மாற்றம் செய்வதற்கும் என ஒட்டுமொத்தமாக 3,57,268 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதேபோல சென்னையில் 3,768 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 12,563 பேர் புதிய வாக்காளர்களுக்கும், 307 பேர் பெயர் நீக்குவதற்கும், 1,814 பேர் திருத்தம் செய்வதற்கும், 3,661 பேர் முகவரி மாற்றம் செய்வதற்கும் என ஒட்டு மொத்தமாக 18,345 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர்கள் தினத்தன்று புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

Next Story