பத்மாவதி திரைப்பட சர்ச்சையில் எச்.ராஜாவை டுவிட்டரில் கலாய்த்த நடிகை கஸ்தூரி!


பத்மாவதி திரைப்பட சர்ச்சையில் எச்.ராஜாவை டுவிட்டரில் கலாய்த்த நடிகை கஸ்தூரி!
x
தினத்தந்தி 20 Nov 2017 10:39 AM GMT (Updated: 20 Nov 2017 10:39 AM GMT)

பத்மாவதி திரைப்பட சர்ச்சையில் பா.ஜனதா தலைவர் எச்.ராஜாவை டுவிட்டரில் நடிகை கஸ்தூரி கலாய்த்து உள்ளார்.


சென்னை,

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்து உள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. படத்தின் நாயகி தீபிகாவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ளநிலையில் படத்தின் வெளியீடு தேதியை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு பேசுகையில், தீபிகா மற்றும் பன்சாலியின் தலைக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்த மீரட் இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டார். அவர்களுடைய தலையை எடுப்பவருக்கு நாங்கள் ரூ. 10 கோடி பரிசு வழங்குவோம், அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதியையும் நாங்கள் ஏற்படுத்தி கொடுப்போம் என்றார். மேலும் தேவைப்பட்டால் பா.ஜனதாவில் இருந்து விலகுவேன் என கூறிஉள்ள சுராஜ் பால் அமு, பத்மாவதி படம் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறிஉள்ளார். அவருடைய  பேச்சு பெரும் சர்ச்சையாகியது.

இந்த செய்தியை டுவிட்டரில் பதிவு செய்து உள்ள நடிகை கஸ்தூரி பா.ஜனதா தலைவர் எச்.ராஜாவை கலாய்த்து உள்ளார். "சூரஜ் பால் அமு, எச்.ராஜவையே கூஜாவாக்கி விட்டார். சுரஜ் பால் அமு பாஜகவுக்கு கிடைத்த சொத்து” என பதிவிட்டு உள்ளார் கஸ்தூரி.


Next Story